குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
46–வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 46–வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தண்ணீரை லாரிகள் மூலம் விலைக்கு வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் முடிந்த நிலையிலும் இதுவரை அந்த நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரியும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று குமரப்பாநகர் பகுதியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காலிக்குடங்களுடன் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.