தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம்

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.காளிபாளையத்தில் 3 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு அமராவதி மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, பேரூராட்சிக்கு சொந்தமான கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 1 மாதமாக காளிபாளையம் பகுதிக்கு மட்டும் போதுமான அளவு குடிநீர் வழங்குவதில்லை.

டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்

எனவே குடிநீர் கேட்டு கடந்த 1 மாதத்திற்கு முன்பு இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்குவதாக ஊறுதி அளித்தனர்.

அதன் அடிப்படையில் டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 3 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் போது, ஒரு வீட்டிற்கு 2 குடம் குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால் மாதம் 6 குடம் குடிநீரை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

சாலை மறியல்

எனவே முறையாக குடிநீர் வழங்கக்கோரியும், குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நேற்று தாராபுரம்–கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தாசில்தார் கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெரினாபேகம், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், அனந்தநாயகி, பேரூராட்சி தனி அலுவலர் திருமலைசாமி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஆனால் அதிகாரிகள் கூறியதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது காளிபாளையம் பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாய்களை அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் முன்வைத்தார்கள்.

இந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சுமார் காலை 8 மணிக்கு தொடங்கிய சாலைமறியல் போராட்டம், மதியம் 12 மணிவரை நீடித்தது. அதன்பிறகு காளிபாளையத்தில் உள்ள மேல் நிலைத்தொட்டியிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாய்கள் அடைக்கப்பட்டு, காளிபாளையம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டு, பெண்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் தாராபுரம்–கரூர் சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story