தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 100–க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர்.
தேனி,
முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு நேற்று வந்தார். அ.தி.மு.க. பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவான பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்டத்துக்கு வந்தார்.
வரும் வழியில் ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை வரவேற்க 100–க்கும் மேற்பட்ட வாகனங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அணிவகுத்து நின்றனர். ஆரத்தி எடுத்தும், மாலைகள் அணிவித்தும் வரவேற்பு கொடுத்தனர்.
சிலைகளுக்கு மாலைபின்னர் ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கும், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் முத்துராமலிங்கதேவர் சிலைக்கும் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, தேனி வழியாக தான் வெற்றி பெற்ற போடி சட்டமன்ற தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.
செல்லும் வழியெங்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரியகுளம், தேனி அல்லிநகரம், கோடாங்கிப்பட்டி, மீனாட்சிபுரம், போடி உள்பட 15–க்கும் மேற்பட்ட இடங்களில் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அல்லிநகரம் வரை 100–க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அணிவகுப்பு வரவேற்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இதுவரை இல்லாத வரவேற்புபோடி சாலை பிள்ளையார் கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தில் 3 முறை முதல்–அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்–அமைச்சராக இருந்தபோது தேனி மாவட்டத்திற்கு வந்த நாட்களில் கூட இவ்வளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது கிடையாது.
அதேபோல், முதல்–அமைச்சராக, அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்துக்கு வந்த போதும் இவ்வளவு வாகனங்கள் அவருடன் அணிவகுத்து வந்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல் வீசப்பட்டதாக பரபரப்புஇதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் கார் ஆண்டிப்பட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி பகுதியில் வந்தபோது, காரை நோக்கி கல் வீசப்பட்டதாகவும், செருப்பு வீசப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
ஓ.பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டி வழியாக தேனிக்கு வந்து கொண்டு இருந்தபோது, தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்செல்வன்(சசிகலா அணி) தேனியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தார். செல்லும் வழியில் அரப்படித்தேவன்பட்டியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டபோது, எதிரே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து கொண்டு இருப்பதால் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு க.விலக்கில் இருந்து வைகை அணை வழியாக தங்கதமிழ்செல்வன் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அரப்படித்தேவன்பட்டியை கடந்து சென்றார். அப்போது அங்கு நின்ற சிலர் கூச்சல் போட்டனர். கல்லோ, செருப்போ வீசப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறு போலீசார் கூறினர்.