20 நாட்களாக காவிரி குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூரில் 20 நாட்களாக காவிரி குடிநீர் வழங்காததால் அவதியடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த சங்குபேட்டை பகுதி பொதுமக்கள், வாரத்திற்கு ஒரு முறை என சீராக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்புஇது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே நகராட்சி லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். முன்னதாக சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.