பா.ஜனதா உறுப்பினர்களின் தர்ணா போராட்டத்தால் கர்நாடக சட்டசபை 2–வது நாளாக முடங்கியது சபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்றும் தர்ணா போராட்டம் நடத்தியதால் கர்நாடக சட்டசபை 2–வது நாளாக முடங்கியது. இதையடுத்து சபை திங்கட்கிழமைக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு,
பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்றும் தர்ணா போராட்டம் நடத்தியதால் கர்நாடக சட்டசபை 2–வது நாளாக முடங்கியது. இதையடுத்து சபை திங்கட்கிழமைக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பேடு குறித்து விவாதிக்க...கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15–ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்–மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2–வது நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மந்திரிகள் பணம் கொடுத்த விவரங்கள் அடங்கிய குறிப்பேடு(டைரி) குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் கே.பி.கோலிவாட், விதி எண் 69–ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் முடிவடைந்த பிறகு குறிப்பேடு குறித்த விவாதம் தொடங்கியது. ஜெகதீஷ் ஷெட்டர் பேசத்தொடங்கினார். இதற்கு மந்திரிகள் ஜெயச்சந்திரா, ரமேஷ்குமார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சபாநாயகர் குறிப்பேடு குறித்த விவாதத்திற்கு தான் வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றார்.
2–வது நாளாக தர்ணாஇதை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் நேற்று முன்தினம் சபையில் தர்ணா நடத்தினர். இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 3–வது நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் குறிப்பேடு குறித்து விவாதிக்க அனுமதி வழங்க கோரி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு 2–வது நாளாக தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் குறுக்கிட்டு, சபையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு பா.ஜனதா உறுப்பினர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் சபையில் கூச்சல்–குழப்பம் நிலவியது. இதையடுத்து சபாநாயகர் சபையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார்.
ஒத்துழைப்பு வழங்குமாறு...அதைத்தொடர்ந்து சபாநாயகர், சட்டசபை கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். இதில் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சபாநாயகர், சபையை சுமூகமாக நடத்த பா.ஜனதா ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் பா.ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறிவிட்டதால் இந்த சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து சபை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். அப்போது ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், “காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் விவரங்கள் அடங்கிய குறிப்பேடு வெளியாகி இருப்பது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். இது முக்கியமான பிரச்சினை. ஒரு முறை நீங்களே(சபாநாயகர்) அனுமதி கொடுத்துவிட்டு அதை வாபஸ் பெற்றுள்ளீர்கள். இது சரியல்ல. குறுகிய காலக்கெடுவை விதித்து விவாதம் நடத்த அனுமதி வழங்கினால் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அந்த குறிப்பேட்டில் மந்திரிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது“ என்றார்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஜெகதீஷ் ஷெட்டரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் எழுந்து, சபையை தொடர்ந்து நடத்த வேண்டும். மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இந்த கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேசிய சித்தராமையா, “பா.ஜனதாவினர் அரசியலுக்காக இந்த பிரச்சினையை கிளப்புகிறார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அதுபற்றி விவாதிக்க பா.ஜனதாவினருக்கு ஆர்வம் இல்லை. அதை விடுத்து சபையின் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குகிறார்கள். பா.ஜனதாவினர் ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்“ என்றார்.
சபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்புஅப்போது பேசிய சபாநாயகர் கே.பி.கோலிவாட், “குறிப்பேடு விவாதத்திற்கு அனுமதி இல்லை என்று நேற்றே எனது முடிவை அறிவித்துவிட்டேன். அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் நான் முடிவை ரத்து செய்தேன். அதனால் மீண்டும் அந்த விவாதத்திற்கு அனுமதி வழங்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு திரும்புங்கள். சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்“ என்றார். ஆனால் சபாநாயகரின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா உறுப்பினர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் சபையில் தொடர்ந்து கூச்சல்–குழப்பம் நிலவியதை அடுத்து சபையை சபாநாயகர் வருகிற திங்கட்கிழமைக்கு (நாளை மறுநாள்) ஒத்திவைத்தார். இதனால் கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று 2–வது நாளாக முடங்கியது. இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டர் வறட்சி குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு நேற்று கோரினார். இதற்கு அனுமதி இல்லை என்றும், பட்ஜெட் மீது நடைபெறும் விவாதத்தின்போது வறட்சி குறித்தும் பேசுமாறு அரசு தரப்பில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்டது.