காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் சாலைமறியல்
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் சாலைமறியல் 138 பேர் கைதாகி விடுதலை
புதுக்கோட்டை
வேலை நிறுத்த போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, திருமயம் உள்ளிட்ட 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் 700–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் விரைந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
மேலும் ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர், பணியிடம் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். உதவி பொறியாளர் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கடந்த 15–ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4–வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 138 ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.