மருத்துவ கல்லூரி அமைக்கக்கோரி நாளை மறுநாள் உண்ணாவிரத போராட்டம்
மருத்துவ கல்லூரி அமைக்க கோரி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதி மக்கள் கூறினர்.
கரூர்
2014–ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110–ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக ரூ.229½ கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி அமைக்க கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடத்திற்கும் செல்லும் வழியில் கரூர் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. அதில் இருந்து ஏற்படும் புகையினால், மருத்துவ கல்லூரிக்கு உடல் நிலை சரியில்லாதவர்களை கொண்டு செல்லும்போது மேலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் கரூர் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கும், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைய உள்ள இடமும் அதிக தூரத்தில் உள்ளது. இதனால் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அடிக்கல்இதற்கு மாற்று இடமாக கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி பகுதியில் மருத்துவ கல்லூரி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு மார்ச் மாதம் சணப்பிரட்டி பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான பணியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் கட்டுமான பணி தொடங்கவில்லை.
அமைதி பேச்சுவார்த்தைஇந்த நிலையில் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தான் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணியன், வடிவேல், காமராஜ் உள்பட வாங்கல் குப்புச்சிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டிபேச்சுவார்த்தை முடித்து வெளியே வந்தவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
பேச்சுவார்த்தையின்போது நல்ல முடிவு எடுப்பதாக கலெக்டர் கோவிந்தராஜ் கூறியுள்ளார். ஆனால் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க கோரி திட்டமிட்டபடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் கோர்ட்டில் அனுமதி பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்கு வாதம்அமைதி பேச்சுவார்த்தையில் வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அதேபோன்று சணப்பிரட்டி பகுதியில் அமைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கலந்து கொண்டனர். இதனால் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.