கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கைது
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கைது
சென்னிமலை,
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து சென்னிமலை அருகே போராட்டம் நடத்த முயன்ற தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் கைது செய்யப்பட்டார். இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சென்னிமலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதி மறுப்புபவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி பவானி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு பெருந்துறை ரோட்டில் யு.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும், இந்த போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் விவசாய அமைப்புகள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
போலீசார் குவிப்புஇந்நிலையில், தடையை மீறி ஈரோடு யு.ஆர்.சி. நகர், சென்னிமலை பஸ் நிலையம் மற்றும் சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையம் கிராமம் ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும் யு.ஆர்.சி. நகர், சென்னிமலை பஸ் நிலையம், சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் நேற்று காலை 8 மணி அளவில் குவிக்கப்பட்டனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகளின் பஸ் நிறுத்த பகுதிகளில் போலீசார் நின்று கொண்டு மாணவர்கள் யாராவது போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனரா? என கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
குறிப்பாக சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையத்துக்கு ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. வாகனத்தில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான போலீசார் உப்பிலிபாளையத்தில் உள்ள மெயின் ரோட்டில் அணிவகுத்து நின்றனர். காலையிலேயே ஏராளமான போலீசார் உப்பிலிபாளையம் பகுதியில் குவிக்கப்பட்டு இருந்ததை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணத்தை பொதுமக்களிடம் போலீசார் கூறிய பிறகே அங்குள்ளவர்களுக்கு இங்கு போராட்டம் நடைபெற உள்ளது என்ற விவரம் தெரியவந்தது.
இந்த நிலையில் 10 மணியளவில் தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன் தலைமையில், 20–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் இங்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை எனக்கூறி கி.வே.பொன்னையன் மற்றும் அவருடன் வந்த விவசாயிகளை தடுத்தனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அனுமதி இன்றி போராட்டம் நடத்த முயன்றதாக பொன்னையனை மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கைது செய்தார். கைது செய்யப்பட்ட பொன்னையன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்படத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் உப்பிலிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.