மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்


மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 18 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை.

பொள்ளாச்சி,

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கோரிக்கை விடுத்தார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டு உள்ள 1000 மதுக்கடைகள் மற்றும் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகளின் பணியாளர்களுக்கு அரசின் காலிபணியிடங்களில் நிரந்தர மாற்றுப்பணி வழங்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கந்தவடிவேல், செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி

பின்னர் சங்க மாநில தலைவர் பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் எடுத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் போராட்டத்தை தொடங்கினோம். கோரிக்கையை ஏற்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். தற்போது 2–வது தவணையாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளது.

ஆனால் 1000 கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று போராடிய போராட்டம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அரசாணையில் பணி நியமனத்தை ஏ, பி என 2 ஆக பிரித்து பணி வழங்கப்படுகிறது.

சென்னையில் பேரணி

அதாவது ஒரு கடையில் ஒரு மேற்பார்வையாளருக்கு பதில், மேலும் ஒரு மேற்பார்வையாளரை நியமனம் செய்து சுழற்சி முறையில் பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணி நியமனம் பணியாளர்களின் எதிர்பார்ப்பையோ அல்லது கோரிக்கையையோ நிறைவேற்ற தகுந்ததாக இல்லை. கல்வி தகுதிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். தனி, தனியாக பணியாளர்கள் அரசுக்கு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர்.

இதை ஒட்டுமொத்தமாக அனைவரும் வலியுறுத்தும் வகையில் அடுத்த மாதம் 9–ந்தேதி மகாவீரர் ஜெயந்தி அன்று சென்னையில் பணியாளர்கள் பாதுகாப்பு பேரணி நடத்த உள்ளோம். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவில்லை என்றால் போரட்டம் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story