ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி, கன்றுக்குட்டி


ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி, கன்றுக்குட்டி
x
தினத்தந்தி 18 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் சிறுத்தைப்புலி மற்றும் கன்றுக்குட்டி இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகே ஆனைக்கட்டி பகுதியில் ஆர்நாட்டுக்காடு என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் 50–க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஆர்நாட்டுக்காடு கிராமத்துக்குள் கடந்த சில நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 8–ந் தேதி மர்ம விலங்கால் 4 ஆடுகள் கொல்லப்பட்டன. அப்போது கால் தடங்களை வைத்து ஆடுகளை கொன்றது சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் இடையே எழுந்தது. ஆனால் வனத்துறையினர் ஆனைக்கட்டி வனப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமே வசித்து வருகின்றன. சிறுத்தைப்புலிகள் இல்லை என்று கூறினர்.

சிறுத்தைப்புலி, கன்றுக்குட்டி சாவு

இந்த நிலையில் ஆர்நாட்டுக்காடு கிராமத்தை ஒட்டியுள்ள மலையடிவார பகுதியில் நேற்று முன்தினம் உடலில் காயங்களுடன் சிறுத்தைப்புலியும், கன்றுக்குட்டியும் இறந்து கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுத்தைப்புலி மற்றும் கன்றுக்குட்டியின் உடலில் ரத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

இறந்து கிடந்த பெண் சிறுத்தைப்புலிக்கு 3 வயது இருக்கும். இவை இரண்டும் சண்டையிட்டு இறந்தனவா? அல்லது யாரேனும் வி‌ஷம் வைத்து கொன்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் கால்நடை மருத்துவர் மனோகரன் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலி, கன்றுக்குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. மேலும் அவற்றின் உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னரே சிறுத்தைப்புலி மற்றும் கன்றுக்குட்டி எப்படி இறந்தன? என்பது தெரியவரும். மேலும் இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story