புனே நகரில் இருந்து நெல்லைக்கு திண்டுக்கல், பழனி வழியாக சிறப்பு ரெயில்
மராட்டிய மாநிலம் புனே நகரில் இருந்து நெல்லைக்கு திண்டுக்கல், பழனி வழியாக (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் சிறப்பு ரெயில்.
பழனி,
மராட்டிய மாநிலம் புனே நகரில் இருந்து நெல்லைக்கு முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய கோடைகால சிறப்பு ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரெயில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. ரெயிலில் 15 பெட்டிகள் இருக்கும்.
புனே நகரில் இருந்து ஏப்ரல் 2–ந்தேதி மாலை 4.15 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. மங்களூர், கண்ணனூர், சொரனூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக நெல்லைக்கு 4–ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்றடைகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு அதே மார்க்கத்தில் மீண்டும் புனேவுக்கு ரெயில் புறப்பட்டு செல்கிறது.
இயற்கை எழில்மிகு காட்சிநெல்லைக்கும், புனேவுக்கும் இடையே 1,752 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில் சென்று வருகிறது. பயண நேரம் 35¾ மணி நேரம் ஆகும். 35 ஊர்களில் இந்த ரெயில் நின்று செல்லும். மேற்கு கடற்கரை வழியாக, இந்த ரெயில் இயக்கப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும். இதனால் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை பயணிகள் ரசித்தபடி பயணம் செய்யலாம்.
இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகள், சுற்றுலா அனுபவத்தை பெறுவதற்கு வாய்ப்பாக உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயிலில் நெல்லையில் இருந்து புனேவுக்கு ரூ.2,305 கட்டணம் ஆகும். பொள்ளாச்சியில் இருந்து ரூ.2,095–ம், உடுமலையில் இருந்து ரூ.2,115–ம், பழனியில் இருந்து ரூ.2,145–ம், திண்டுக்கல்லில் இருந்து ரூ.2,180–ம், மதுரையில் இருந்து ரூ.2,230–ம் கட்டணம் ஆகும்.
சாதாரண பெட்டிகள்பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக ஒரு புதிய ரெயில் இயக்கப்படுவது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் நெல்லையில் இருந்து புனே நகருக்கு தூங்கும் வசதியுடன் கூடிய 2–ம் வகுப்பு ரெயில் பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ.620 ஆகும்.
ஆனால் தற்போது இயக்கப்பட உள்ள குளிர்சாதன வசதி கொண்ட ரெயிலில் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பெட்டிகளையும் இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விடுத்துள்ளனர்.