புதுச்சேரிக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் மத்திய மந்திரியிடம், நாராயணசாமி வலியுறுத்தல்


புதுச்சேரிக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் மத்திய மந்திரியிடம், நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 March 2017 4:45 AM IST (Updated: 18 March 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் என்று மத்திய மின்துறை மந்திரியிடம் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை கையாளுவது தொடர்பாக கடந்த 15–ந்தேதி சென்னை துறைமுகத்துக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் கையெழுத்தானது.

நேற்று முன்தினம் விமான போக்குவரத்துத்துறை மந்திரி கஜபதிராஜூவை நாராயணசாமி சந்தித்துப் பேசினார். அவரிடம் புதுவையில் இருந்து விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நாராயணசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயலையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது புதுவை மாநிலத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்த போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை முதல்– அமைச்சர் முன்வைத்தார்.

100 மெகாவாட் மின்சாரம்

*புதுச்சேரிக்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து அதிகப்படியான மின்சாரம் வழங்கவேண்டும்.

*ஒடிசா தளபார் மின்நிலையத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை புதுச்சேரிக்கு வழங்கவேண்டும்.

*புதுச்சேரி மக்கள் தங்கள் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க மானியம் வழங்க நிதியுதவி செய்ய வேண்டும்.

*புதுச்சேரி மாநிலத்திற்கு வெளியில் இருந்து வரும் போது ஏற்படும் மின்சார இழப்பை தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நிதியுதவி அளிக்க வேண்டும்.

மத்திய மந்திரி உறுதி

இந்த கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம், ஒரிசாவின் தளபார் மின் நிலையத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரம், சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க மானியம், மின்சார இழப்பை தடுக்க தேவையான பணிகளை மேற்கொள்வதற்கான நிதியுதவி ஆகியவற்றை வழங்க உறுதியளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story