3. வ.உ.சி: எழுச்சி நாயகனை வீழ்த்திய சிறை!


3. வ.உ.சி: எழுச்சி நாயகனை வீழ்த்திய சிறை!
x
தினத்தந்தி 18 March 2017 5:22 PM IST (Updated: 18 March 2017 5:22 PM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உலகின் ஒரே தலைவரான வ.உ.சியின் வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி ரகசியமான ரகசியங்கள் தொடரில் பார்த்து வருகிறோம்.

40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உலகின் ஒரே தலைவரான வ.உ.சியின் வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி ரகசியமான ரகசியங்கள் தொடரில் பார்த்து வருகிறோம். வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒட்டி நடந்த நிகழ்வுகளைக் கடந்த வாரம் கண்டோம். கோவை சிறையில் வ.உ.சி.க்கு உண்மையில் நடந்தவை பற்றியும், அவர் விடுதலையான பிறகு நிகழ்ந்த சம்பவங்களையும் இப்போது படிக்கலாம்.

கோவை சிறைக்குள் காற்றோட்டமோ, சுகாதாரமோ இல்லாத தனியறையில் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு நிலையில் வ.உ.சி. அடைக்கப்பட்டார். தலையை மொட்டை அடித்தார்கள். முரட்டுத்துணியாலான சாக்கு போன்ற  சட்டை அளிக்கப்பட்டது.

ஆயிரமாயிரம் பேருக்கு அறுசுவையோடு உணவு படைத்த அவருக்கு புளித்தும், புழுத்தும் போன கேழ்வரகு களியைக் கொடுத்தார்கள். அரிசி சோறு வேண்டுமென்று கேட்டதற்காக மூன்று நாட்கள் எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். அளிக்கிற உணவில் கல்லும், மண்ணும் கலந்திருந்தன.

முதலில் சணல் கிழிக்கும் எந்திரத்தைச் சுற்றும் வேலையைச் செய்ய வைத்தார்கள். கொடுத்து சிவந்த அந்த கரங்களில் தோல் கிழிந்து, ரத்தம் வழிந்தது. கண்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன.

‘கைகளில்தானே ரத்தம் வருகிறது’ என எண்ணெய் ஆட்டும் செக்கில் மாட்டுக்குப் பதிலாக அந்த மாமனிதரைப் பூட்டினார்கள். கொளுத்திய வெயிலில் நாள் முழுக்க செக்கிழுக்க வைத்தார்கள். அதில் தடுமாறி கீழே விழுந்த போதெல்லாம் மாட்டை அடிப்பதைப் போன்றே அடித்தார்கள்.

சக கைதிகள் சிதம்பரம் பிள்ளை மீது கொண்ட மரியாதையால், ஜெயிலர் வரும் போது மட்டும் அவரைச் செக்கிழுக்க வைத்துவிட்டு, மற்ற நேரங்களில் தாங்களே அந்த வேலையைச் செய்தனர். பிறகு கொஞ்ச காலம் வ.உ.சியைக் கல்லுடைக்கவும் வைத்தார்கள்.

கோவை சிறையின் கொடுமைகளைத் தாங்க முடியாமல், ‘என்னை தீவாந்திரந்திரத்திற்கே அனுப்பி விடுங்கள்’ என சென்னை மாகாண அரசுக்கு கடிதம் எழுதினார் வ.உ.சி. அதன் பிறகு உயர்நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. அங்கே சங்கரன் நாயர் என்ற இந்திய நீதிபதி பிறப்பித்த ஆணையின் படி, மற்ற கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதில் இருந்து சில காலம் அவருக்கு விலக்கு கிடைத்தது.

ஒரு நாள் ஜெயிலர் முன்பு வ.உ.சியைப் பார்த்து, ‘வணக்கம் ஐயா’ என்றார் வடுகுராமன் எனும் சீனியர் கன்விக்ட் வார்டர். சிவகாசி கலவர வழக்கில் தண்டனைக் கைதியான அவரது செயல், ஜெயிலரை ஆத்திரமூட்டியது. கடுமையாக எச்சரித்தான். இதனை வடுகுராமன் மற்றவர்களிடம் சொல்ல சிறைக்குள் வெடித்தது கலவரம். ஜெயிலர் மிஞ்சேல் அடித்து நொறுக்கப்பட்டார்.

கலவரம் தொடர்பாக பின்பு நடந்த விசாரணையில், கைதிகளுக்கு ஆதரவாக துணிவோடு சாட்சி சொன்னார் சிதம்பரம் பிள்ளை. அதன்பின்னும் அவரை அதே சிறையில் வைத்திருப்பது சரியாகாது என்று நினைத்த வெள்ளை அரசாங்கம், அன்றைய சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த மலபார் (கேரளா) பகுதியில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றியது.

இரண்டரை ஆண்டுகள் கோவை கொடுஞ்சிறையில் இருந்த வ.உ.சி.க்கு கண்ணனூர் சிறை சிறிது ஆறுதலாக இருந்தது. அங்கிருந்தவர்களும் மரியாதையாக நடத்தினார்கள்.

சிதம்பரனார் சிறைக்குப் போனதும் சுதேசி கப்பல் நிறுவனத்தை வீழ்த்தும் வேலை வெள்ளையருக்கு எளிதானது. இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் தான் அந்நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்க முடியும் என்ற நிலையில், கப்பல்களை ஆங்கிலேயரிடமே விற்று காசாக்கினார்கள் அதன் இயக்குனர்கள்.

சிறைக்குள்ளிருந்து இந்த செய்தி கேட்டு உடைந்து நொறுங்கினார் வ.உ.சி. கொடுமையிலும் கொடுமையாக சுதேசி கப்பல் கம்பெனிக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சிதம்பரம் பிள்ளையின் அரசியல் நடவடிக்கையே காரணம் என்று சொல்லி அதற்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசும் அனுப்பினார்கள்.

யாருக்கு எதிராக தொடங்கப்பட்டதோ அந்த வெள்ளையரிடமே சுதேசி கப்பல் போனதைக் கண்டு பாரதியார் பொங்கி தீர்த்துவிட்டார்.

‘மானம் பெரிது! மானம் பெரிது! ஒரு சில ஓட்டைக் காசுகளுக்காக (அணா நாணயங்கள் புழக்கத்திலிருந்த காலத்தில் காசுகளின் நடுவே ஓட்டை போடப்பட்டிருக்கும்) எதிரிகளிடமே கப்பலை விற்றுவிட்டார்களே, பாவிகள். அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காளக்குடாக் கடலில் மிதக்க விட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்தச் சில காசுகள் போய்விட்டாலா தமிழ்நாடு அழிந்து விடும்? பேடிகள்!’ என்றார் பாரதி.

கதறிய என்ன, புலம்பி என்ன, காலம் போடும் கோலத்தை யாரால் மாற்றிட முடியும்? கண்ணனூரில் இரண்டாண்டு சிறை வாசத்திற்குப் பின்னர், தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு 1912 டிசம்பர் 24–ல் விடுதலையானார் சிதம்பரனார். அவர் விடுவிக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ஆங்கிலேய அரசின் உளவுத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. முக்கிய நகரங்களின் காவல்நிலையங்களுக்கு சிறப்பு கடிதங்கள் பறந்தன.

வ.உ.சியை வரவேற்க செய்யப்படும் ஏற்பாடுகள், அதனைச் செய்பவர்கள், போகுமிடமெல்லாம் அவரைச் சந்திப்பவர்கள் எல்லோரையும் கண்காணிக்கச் சொன்னார்கள். அந்தளவுக்கு அவரை உயர்வாக மதிப்பிட்டார்கள் ஆங்கிலேயர்கள். ஏனென்றால் அவர் செய்த கனல் தெறிக்கும் விடுதலைப் போராட்ட பணிகள் அப்படிப்பட்டவை.

ஆனால் அதற்கெல்லாம் நன்றியுள்ள நம் மக்கள் வேலை வைக்கவில்லை. ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து முழக்கமிட சிறை புகுந்த வ.உ.சியை வரவேற்க மனைவி, மக்களைத் தவிர சிறைவாசலுக்கு வந்தவர் ஒரே ஒருவர்தான். அவரைக்கூடச் சிதம்பரனாருக்கு அடையாளம் தெரியவில்லை. அவர், வேறு யாருமல்லர், வ.உ.சியின் நெருங்கிய நண்பர் சுப்ரமணிய சிவா. சேலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த சிவா, அந்தளவுக்கு உருத்தெரியாத தொழுநோயாளியாக மாறி இருந்தார்.

சிறைக்குள் கம்பளம் தயாரிப்பதற்காக சுண்ணாம்பு நீரில் ஊறவைக்கப்பட்ட ரோமத்தைப் பிரித்தெடுக்கும் வேலையால், இக்கொடூர நோய் சிவாவைப் பீடித்துவிட்டது.



நான்கரை ஆண்டுகளில் சிதம்பரம் பிள்ளையின் தியாகத்தைச் தேசம் மறந்து போயிருந்தது. காங்கிரஸ் கட்சியின் போக்கே மாறியிருந்தது. சுதந்திர வேள்வித் தீ எரிய தம் சொத்து, சுகம் அத்தனையையும் நெய்யாக்கி தந்த சிதம்பரம் எனும் சீர்மிகு தலைவரை வரவேற்கக்கூட சிறை வாசலுக்குப் போக தமிழக அரசியல் தலைவர்கள் யாருக்கும் மனமில்லை.

சிறையில் இருந்தபோது அடைந்ததைவிட, ஆகப்பெரிய அவமானங்களையும் துயரங்களையும் அதன் பிறகு வாழ்ந்த 24 ஆண்டுகளில் அனுபவித்தார் வ.உ.சி. விடுதலையாகி கண்ணனூர் நண்பர் கணபதி பிள்ளை வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு, குடும்பத்தோடு 1913–ம் ஆண்டு சென்னையில் குடியேறினார்.

சிறைக்குப் போய்விட்டு வந்ததால் வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமம் ரத்தானது. அதனால் தெரிந்த வக்கீல் தொழிலைச் செய்ய முடியவில்லை. நண்பரான என்.தண்டபாணி பிள்ளையின் அரிசிக்கடையில் மாதம் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார்.

சென்னையை உலுக்கி எடுத்த பஞ்ச காலம் அது. ரூபாய்க்கு 4 படி அரிசி; அதுவும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஒரு ரூபாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டது. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, தன் வீட்டுக்கு நான்கு படி அரிசியோடு செல்வார் வ.உ.சி. நாளடைவில் இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள், சிதம்பரம் பிள்ளை தொடர்பைக் காரணம் காட்டி தண்டபாணி பிள்ளையின் அரிசிக்கடை உரிமத்தையே ரத்து செய்தனர். கடை மூடப்பட்டது. ஊருக்கே படி அளந்தவரின் குடும்பத்திற்கு கிடைத்து வந்த அரை வயிற்றுக் கஞ்சிக்கும் ஆபத்து வந்தது.

மனைவி, மக்களைக் காப்பாற்ற சீமை எண்ணெய் (மண்ணெண்ணெய்) வியாபாரம் செய்தார். இதற்காக சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் ‘பிராமிசரி நோட்’ எழுதி கொடுத்து விட்டு, 10 ரூபாய் கடன் வாங்கினார். கடனையும் அடைக்க முடியவில்லை. எண்ணெய் வியாபாரமும் எடுபடவில்லை. அதன் பிறகு தொழிற்சங்கத் தலைவர் சர்க்கரை செட்டியாரும், கஜபதி செட்டியாரும் கடை பிடித்துக் கொடுத்து உதவிட, சொந்தமாக அரிசி வியாபாரம் செய்தார். பின்னர் அதிலும் லாபம் கிடைக்காமல் போகவே கடையை அவர்களிடமே விட்டுவிட்டார்.

பெரம்பூர் அஞ்சலகம் அருகே ஒரு சிறிய வீட்டில் குடியேறி, ஆன்மிகச் சொற்பொழிவு, புத்தகம் எழுதுதல் எனக் காலங்கழித்தார். அருமையான மனையியல் மற்றும் இலக்கிய நூல்களை எழுதி குவித்தார். அதெல்லாம் சாப்பாட்டுக்கு வழி செய்யுமா என்ன?

‘வந்த கவிஞர்க்கெலாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று சந்தமில் வெண்
பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து’


இப்படி நண்பர் ஒருவருக்குத் தன் நிலையைக் கவிதையாக வடித்து சிதம்பரனார் எழுதிய கடிதம் படிக்கும் போதே நெஞ்சைப் பிசைகிறது.

தொழில் முயற்சிகள் பலனிக்காத நிலையில் காங்கிரசின் மூத்த தலைவரும், பெரிய வழக்கறிஞருமான சீனிவாச அய்யங்காரைப் பார்த்து, வழக்கு தயாரிப்பதில் உதவுவதற்கான வேலை தருமாறு கேட்டார். ‘இவ்வளவு பெரிய மனிதரை எப்படி வேலைக்கு வைத்துக்கொள்வது’ என்று தயங்கினரோ என்னவோ, உள்ளே போய் ஒரு உறையில் கொஞ்சம் பணத்தை எடுத்து வந்து வ.உ.சியிடம் கொடுத்தார். ‘எனக்கு வேலை தான் வேண்டும்; பணம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.

‘வழக்கறிஞர் உரிமத்தை மீட்டெடுப்பதற்கு நீதிமன்றத்தில் வாதாடி உதவ வேண்டும்’ என்று மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜியைச் சந்தித்து கேட்டார். ‘அதற்கு வாய்ப்பு குறைவு’ என்று சொல்லி வழக்கை எடுக்க ராஜாஜி விரும்பவில்லை.

கடைசியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உரிமத்தைத் திரும்ப கேட்டு மனு செய்தார். முன்பு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்த நீதிபதி ஈ.எச்.வாலேஸ் என்பவர் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாகி இருந்தார். வ.உ.சியின் பண்பு நலன்களை அறிந்திருந்த அவர், வழக்கறிஞர் உரிமத்தை 1922–ல் மீண்டும் வழங்கினார்.

அதன் பிறகு வ.உ.சி என்ன செய்தார்? நெஞ்சை உருக்கும் அவரது உயிலில் சொல்லப்பட்டிருப்பது என்ன? சத்தியமூர்த்தி பவனில் வ.உ.சி.க்குச் சிலையை வைப்பதை எதிர்த்த காங்கிரஸ் தலைவர் யார்?

(ரகசியங்கள் தொடரும்)


நன்றிக்குப் பெயர் வ.உ.சிதம்பரனார்

பறிக்கப்பட்ட வழக்கறிஞர் உரிமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலேஸ் என்பவர் வ.உ.சிக்கு மீண்டும் வழங்க ஆணையிட்டார். அதன் நன்றிக் கடனாக தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று வ.உ.சி. பெயரிட்டார். இதே போல, வ.உ.சி. வழக்கு குறித்த ஆவணங்கள் ஆங்கிலேயரிடம் சிக்காதபடி அவற்றை சி.க.சுப்ரமணிய முதலியாரின் மனைவி மீனாட்சி எரித்துவிட்டார். அந்த நன்றிக்காக தன்னுடைய இன்னொரு மகனுக்கு சுப்ரமணியன் என்று சிதம்பரனார் பெயர் வைத்தார்.

வ.உ.சி. இழுத்த செக்கு!

கோவை சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு இரு கருங்கற்களால் ஆனது. புதையுண்ட நிலையில் இருந்த அந்த செக்கு, 64 ஆண்டுகளுக்குப் பிறகு 1972–ல் கண்டுபிடிக்கப்பட்டது. அது வ.உ.சியின் நூற்றாண்டு விழா ஆண்டு.

இரு கற்களில் ஒன்று கோவை மத்திய சிறையிலும், மற்றொன்று சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் உதவியவருக்கு தண்டனை

கோவை சிறையில் இருக்கும் போது ராமையா கவுண்டர் என்ற சிறை ஊழியர் வ.உ.சி. மீது கொண்ட அன்பால் சில உதவிகளைச் செய்து வந்தார். பத்திரிகைகள், உணவுப் பொருட்கள், கடிதங்கள் போன்றவற்றை அவர் மறைத்து எடுத்து வந்து தருவார். அப்படி கொடுக்கும் போது ஒரு நாள் அவர் சிக்கிக் கொண்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட ராமையாவுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்து விடுதலையானதும் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்த வ.உ.சி. பணம் கொடுத்தார். பிற்காலத்தில் வ.உ.சி. கோவைக்கு வந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, ராமையா கவுண்டர் அவரோடு தொடர்பில் இருந்தார்.

தமிழர் மறந்தார்; மற்றவர் போற்றினர்!

1907–ம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் செல்ல எத்தனையோ பேருக்குச் செல்வச்சீமானாக உதவி செய்து, பாரதி போன்ற நண்பர்களுடன் தானும் சென்ற வ.உ.சி. 1919 அமிர்தசரஸ் மாநாட்டுக்குப் போவதற்கு கையில் காசு இல்லாமல் தடுமாறினார். அப்போது காங்கிரசில் இருந்த பெரியார் ஈ.வே.ரா. ரெயிலில் தமக்கு முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கச் சொல்லி தண்டபாணி பிள்ளையிடம் பணம் கொடுத்தார். அதில் இரண்டு மூன்றாம் வகுப்பு பயணச்சீட்டு வாங்கிவிட்டு, மீதிப்பணத்தை வ.உ.சியிடம் செலவுக்குக் கொடுத்தார் அவர். பெரியாரும் அதை ஏற்றுக்கொண்டார்.

அதே ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலர் பயணம் செய்தனர். ரெயில் புனே சென்றதும் மாலைகளுடன் பெரிய கூட்டம் முதல் வகுப்பு பெட்டியில் ஏறியது. தங்களுக்குதான் வரவேற்பு என்று நினைத்த மூத்த தலைவர்கள் ஏமாந்து போக, மூன்றாம் வகுப்பு பெட்டியில் இருந்த வ.உ.சி.க்கு மாலை போட்டு, வாழ்த்து முழக்கமிட்டனர். தின்பண்டங்களையும் கொடுத்து தங்கள் அன்பைக் காட்டினர். பஞ்சாப் போகும் வரை வழிநெடுகிலும் வ.உ.சி.க்கு இந்த அன்பு கிடைத்தது ஆச்சரியமான உண்மை.


Next Story