நான்கு வழிச்சாலையில் மரங்கள் வளர்க்க நவீன முறை அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் செயல்விளக்கம்
மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் கிறிஸ்துராஜா கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில், தற்போது நாடு முழுவதும் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, இருவழிச்சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விரிவாக்கம் காரணமாக ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் சாலையோரம் மரங்கள் வளர்க்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மரங்கள் நடப்பட்டாலும் அவற்றை பராமரிக்க போதிய தண்ணீர் வசதி இல்லை. இதனை தவிர்க்க நவீன முறையாக மழைக்காலங்களில் சாலையோரம் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அதில் மழைநீரை சேகரித்து மரங்களை வளர்க்கலாம் என்று மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும் கண்காட்சியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முறை, காற்றினால் இயங்கும் வாகனங்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறை, கழிவுநீரை சுத்திகரித்து தோட்டங்கள், மாடி தோட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்விளக்கத்தை மாணவர்கள் அளித்தனர். மாணவ–மாணவியர்களின் படைப்புகளை பெற்றோர் ஆசிரியர்கள் பாராட்டினர். முடிவில் பள்ளி முதல்வர் ஜெசிகிறிஸ்டி நன்றி கூறினார்.