கச்சத்தீவை திரும்ப பெறுவது தான் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அன்புமணி ராமதாஸ் பேச்சு
கச்சத்தீவை திரும்ப பெறுவது தான் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
ராமேசுவரம்,
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் பா.ம.க. சார்பில் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவ சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசுராஜா, சகாயம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:–
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர். 800–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 6–ந்தேதி மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தை கண்டித்து உலகம் முழுவதும் தெரியும் வகையில் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 1 கோடியும், காயம் அடைந்த சரோனுக்கு ரூ.10 லட்சமும் நிவாரணத்தொகையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தரவேண்டும்.
நிரந்தர தீர்வுகச்சத்தீவு பாரம்பரியமாக நமக்கு சொந்தமானது. இது தாரைவார்க்கப்பட்டபோது ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உரிமை செயல்படுத்தப்படவே வில்லை. பாரம்பரியமான பகுதியில் மீனவர் மீன்பிடிக்கும்போது தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே கச்சத்தீவை திரும்ப பெறுவது தான் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இளைஞர்கள் போராட்டம் வெற்றி கண்டது. இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் பிரச்சினைகளை தவிர்க்க மத்திய அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பிரச்சினை என்றால் கண்டுகொள்வதில்லை. பா.ஜனதா சார்பில் கடல் தாமரை என்ற பெயரில் மாநாடு நடத்தி மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்கள். ஆனால் இதுவரை மீனவர்கள் பிரச்சினைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அரசு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
கூடுதல் மானியம்மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல கூடுதல் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். கடற்கரை பகுதியில் நண்டு, இறால் வளர்க்க மானியம் வழங்கி மீனவர்களுக்கு உதவி செய்யவேண்டும். பிரிட்ஜோவை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும்கட்சி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரிடம் இந்த மீனவர்கள் பிரச்சினை குறித்து கோரிக்கை வைக்கவேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர்களின் படகுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பிரிட்ஜோவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு அன்புமணிராமதாஸ் ஆறுதல் கூறினார். உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரிட்ஜோவின் சகோதரர் ஸ்டீபனுக்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அதற்கான மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக அவர், கூறினார்.