மாவட்டத்தில் 11,565 எக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் கலெக்டர் நடராஜன் தகவல்


மாவட்டத்தில் 11,565 எக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 18 March 2017 6:20 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,565 எக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

பேட்டி

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 947 எக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் இதுவரை மொத்தம் 11,565 எக்டேர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கண்மாய்கள் பொது ஏலத்தில் கொண்டுவர உரிய விளம்பரம் செய்யப்பட்டு ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நேரு யுவகேந்திரா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பெருமளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

உறுதிமொழி

பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மூலமாக அவர்களது பெற்றோர்களிடம் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு கருவேல மரங்களை அகற்ற ஒவ்வொரு பெற்றோர்களிடம் உறுதி மொழி பெறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள் அடங்கிய ஊர்வலங்கள், அரசு கேபிள் மூலமாகவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அவரவர்களே அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் அரசு செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்குரிய செலவு தொகை இருமடங்காக நில உரிமையாளர்களிடம் வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், அறிவிப்பு விளம்பரம் மற்றும் ஒவ்வொரு உரிமையாளருக்கும் நோட்டீசு அளிக்கப்பட்டு தனி நபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துரிதமாக அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக மொத்தம் ரூ.15.31 கோடி மதிப்பீட்டில் 1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.10.10 கோடி மதிப்பீட்டில் 831 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிதாக உறை கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் முள்ளிமுனை, சின்ன ஏர்வாடி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை மத்திய உவர் ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உடனுக்குடன் சரி செய்து வருகின்றனர். இவ்விரு திட்டங்களும் இன்னும் இரு தினங்களில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். காரங்காடு கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பூர்வாங்க பணி

இந்த பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் தொடங்கப்பட உள்ளது. இவை தவிர 15 பெரிய ஊராட்சிகளில் உவர் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்த பூர்வாங்க பணிகள் முடிவடைந்து உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வறட்சி நிவாரண பணிகள், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story