நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி


நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 6:45 PM IST)
t-max-icont-min-icon

நீட் நுழைவு தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி கடலூரில் திராவிடர் கழகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.

கடலூர்,

மோட்டார் சைக்கிள் பேரணி

கடலூர் மாவட்ட திராவிடர் கழக மாணவர் மற்றும் இளைஞர் அணியின் சார்பில் கடலூரில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக தலைவர் தென்.சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணாசிலை அருகில் இருந்து திராவிடர் கழகத்தினர் 20 பேர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். இவர்கள் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு இறுதியாக வருகிற 21–ந் தேதி விருத்தாசலத்தில் பிரசார பயணத்தை நிறைவு செய்கிறார்கள். தொடக்க நிகழ்ச்சியில் மண்டல தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் தாமோதரன், அமைப்பாளர் மணிவேல், நகர தலைவர் எழிலேந்தி மற்றும் மாணவர், இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

5 இடங்களில் இருந்து

இது குறித்து திராவிடர் கழக இளைஞர் அணி நிர்வாகி ஒருவர் கூறும்போது தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரியும் சென்னை, கடலூர், தர்மபுரி, கோவை மற்றும் தென்காசி ஆகிய 5 இடங்களில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி இன்று(நேற்று) புறப்படுகிறது. இந்த பேரணியில் கலந்துகொள்பவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டு இறுதியாக வருகிற 21–ந் தேதி விருத்தாசலத்தில் பிரசார பயணத்தை நிறைவு செய்கிறார்கள். தொடர்ந்து அன்று மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு பேசுகிறார் என தெரிவித்தார்.


Next Story