பிளஸ்–2 மாணவர் இறந்த விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 114 பேர் கைது


பிளஸ்–2 மாணவர் இறந்த விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 114 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே பிளஸ்–2 மாணவர் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

விருத்தாசலம்,

பிளஸ்–2 மாணவர் சாவு

பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவர் சுதாகர் இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரியும், மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரியும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி தலைமையில் மங்கலம்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஊடக அணி மாநில துணை செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதேபோல் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த மறியல் போராட்டத்தில் தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமையில் நகர செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

ராமநத்தம்

இதேபோல் மங்களூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஒன்றிய செயலாளர் சஞ்சய்காந்தி தலைமையில் ராமநத்தம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னதுரை, சுரேஷ், அய்யம்பெருமாள், சிலம்பரசு, அன்பரசு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வேப்பூர்

வேப்பூர் கூட்டுரோடு அருகே சேலம்–கடலூர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஒன்றிய செயலாளர் சந்தோஷ் உள்பட 15 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பெண்ணாடம்

இதேபோல் பெண்ணாடம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெண்ணாடம் பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story