திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் நுழைவு தேர்வு எதிர்ப்பு வாகன பிரசார பயணம் தர்மபுரியில் தொடங்கியது


திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் நுழைவு தேர்வு எதிர்ப்பு வாகன பிரசார பயணம் தர்மபுரியில் தொடங்கியது
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 7:06 PM IST)
t-max-icont-min-icon

திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் நுழைவு தேர்வு எதிர்ப்பு வாகன பிரசார பயணம் தர்மபுரியில் நேற்று தொடங்கியது.

தர்மபுரி,

பிரசார பயணம்

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தர்மபுரியில் இருந்து விருத்தாசலம் வரை விழிப்புணர்வு வாகன பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர் யாழ்திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவாஜி, மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் மாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், மண்டல செயலாளர் வைரம், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் வெங்கடேசன், மண்டல செயலாளர் கருபாலன் ஆகியோர் வாகன பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.

விலக்கு அளிக்க வேண்டும்

நீட் நுழைவு தேர்வால் தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற ஏழை எளிய மாணவ–மாணவிகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ–மாணவிகள் மிகவும் பாதிப்பிற்குள்ளாவதை தவிர்க்க அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடர்ந்து தர்மபுரியில் இருந்து பிரசார வாகன பயணத்தை தொடங்கிய குழுவினர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம், ராசிபுரம் உள்பட பல்வேறு ஊர்களில் நீட்தேர்வை எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து பொதுமக்கள், மாணவ–மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இந்த குழுவினர் நாளை மறுநாள் 21–ந்தேதி விருத்தாசலத்தை சென்றடைகிறார்கள்.


Next Story