மிகப்பெரிய நீர்நிலையான காவேரிப்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும்
காவேரிப்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனப்பாக்கம்,
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நீர்நிலையான காவேரிப்பாக்கம் ஏரியை தூர்வார வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிகப்பெரிய ஏரிவேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரியாகும். இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஏரி, 8–ம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்ம பல்லவ அரசனால் அமைக்கப்பட்டது. காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 1,474 மில்லியன் கனஅடி. தற்போது உள்ள கொள்ளளவு 1,162 மில்லியன் கனஅடி. ஏரியின் உயரம் 30.65 அடி. கரையின் நீளம் 8.35 கிலோ மீட்டர். இந்த ஏரி 6.2 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டு 6 ஆயிரத்து 600 ஏக்கர் ஆகும். ஏரியில் 10 மதகுகளும், 2 நீர் வழிந்தோடியும் உள்ளது.
இந்த ஏரியால் காவேரிப்பாக்கம், கட்டளை, கொண்டாபுரம், சேரி, ஈரளாச்சேரி, மாகானிப்பட்டு, துரைபெரும்பாக்கம், ஆலப்பாக்கம், அத்திப்பட்டு, பன்னியூர், கீழ்வீராணம், கடப்பேரி, சிறுகரும்பூர், புதுப்பட்டு ஆகிய 14 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி 3 ஆயிரத்து 968 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிரம்பினால், அதில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சிறுவளையம் ஏரி, ரெட்டிவலம் ஏரி, உளியநல்லூர் ஏரி, ஜாகீர்தண்டலம் ஏரி, புன்னை ஏரி, அசநெல்லிக்குப்பம் ஏரி, எஸ்.கொளத்தூர் ஏரி, சயனபுரம் ஏரி, கணபதிபுரம் ஏரி, சித்தூர் பெரிய ஏரி, தக்கோலம் கல் ஏரி, தக்கோலம் பெரிய ஏரி, உரியூர் ஏரி உள்பட வேலூர் மாவட்டத்தில் உள்ள 55 ஏரிகள் நிரம்பும்.
14 கிராமங்கள் பயன்பெறும்காவேரிப்பாக்கம் ஏரி கடந்த 1969, 72, 77, 91, 93, 99, 2006 மற்றும் 2015–ம் ஆண்டில் முழுவதுமாக நிரம்பியது. இந்த ஏரியின் மூலம் அரக்கோணம், நெமிலி தாலுகாவில் 13 கிராமங்களும், வாலாஜா தாலுகாவில் ஒரு கிராமமும் என மொத்தம் 14 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியின் மூலம் 19 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. காவேரிப்பாக்கம் ஏரியில் 10 மதகுகளும், 30+27 கலங்களும் (கடைவாசல்) இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் பொதுப்பணித்துறை பொறியாளர் குமார் கூறியதாவது:–
தற்போது காவேரிப்பாக்கம் ஏரியில் 19.01 அடி, அதாவது 20 சதவீத தண்ணீர் மட்டும் உள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காவேரிப்பாக்கம் ஏரியில் சில பகுதிகள் மட்டுமே தூர்வாரப்பட்டது. தூர்வாரிய அந்த மணல் மூலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரியை முழுமையாக தூர்வார ரூ.200 கோடி செலவாகும் என்று மாவட்ட பொதுப்பணித்துறை மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
2015–ம் ஆண்டு டிசம்பர் 10–ந்தேதி காவேரிப்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பி இருந்த நிலையில் கரையின் மீது திடீர் பள்ளம் ஏற்பட்டு ஏரி உடையும் ஆபத்து ஏற்பட்டது. பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கரையின் மீது ஏற்பட்ட திடீர் பள்ளம் சரி செய்யப்பட்டது.
இவ்வாறு பொறியாளர் குமார் கூறினார்.
விவசாயிகள் கோரிக்கைவரலாற்றுச் சிறப்பு மிக்க 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த காவேரிப்பாக்கம் ஏரியை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.