குடிநீர் சீராக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் சீராக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்களால்
நாமக்கல்,
நாமகிரிபேட்டை அருகே உள்ள பிலிப்பாக்குட்டை கிராமமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
பிலிப்பாக்குட்டை கிராமத்தில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு ஒரு மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. எங்கள் ஊரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் முதியோர், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குடிநீர் இன்றி சிரமம் அடைந்து வருகிறோம்.
எனவே, எங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் ஊரின் நடுவில் அமைந்துள்ள பொதுக் கிணற்றை தூர்வாரினால் குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், நேரில் முறையிட்டும், இதுவரை எவ்விர நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
குடிநீர் வினியோகம்மேலும் ஊரில் உள்ள பள்ளியின் அருகே பாழடைந்த மேல்நிலை தொட்டி ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதன் அருகே பள்ளி குழந்தைகள் விளையாடி வருகின்றனர். இது தொடர்பாகவும் மனு கொடுத்து உள்ளோம். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இயற்கை உபாதைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் பள்ளி மாணவ, மாணவிகள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். அதற்கும்கூட தண்ணீர் சரிவர கிடைப்பது இல்லை. எனவே, தாங்கள் (கலெக்டர்) தலையிட்டு எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பொதுமக்கள் திடீரென கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.