தொழில் அதிபருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டில் வருமான வரித்துறை சோதனை


தொழில் அதிபருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 19 March 2017 2:30 AM IST (Updated: 18 March 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் தொழில் அதிபருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை, சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

செங்கம்,

செங்கத்தில் தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை, சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக டெபாசிட்

நாட்டில் கருப்பு பணம் மற்றும் பதுக்கல் பணத்தை ஒழிக்க பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் செலுத்தி புதிய நோட்டுகளை டிசம்பர் 31–ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

எனினும் வங்கிகளில் பலர் வருமானத்துக்கு அதிகமான பணத்தை டெபாசிட் செய்திருந்தார்கள். அவர்களுக்கு அந்த பணம் எவ்வாறு வந்தது? என்பது குறித்து வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் ரூ.50 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் செங்கத்தில் தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், எலக்ட்ரிக்கல் கடை, சூப்பர் மார்க்கெட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:–

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் ராஜாஜி தெருவில் வசிப்பவர் பாபு (வயது 57), தொழில் அதிபர். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் துக்காப்பேட்டையில் உள்ளது. இங்கிருந்து அதிகளவு பழைய 500, 1,000 நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் பங்க் கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்பட்டு வந்த தொகையானது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அதிக அளவில் பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் எலக்ட்ரிக்கல் கடை மற்றும் சூப்பர்மார்க்கெட் நடத்தி வருகிறார்.

வருமான வரித்துறையினர் சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழில் அதிபர் பாபுவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், எலக்ட்ரிக்கல் கடை, சூப்பர் மார்க்கெட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். 5 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் துக்காப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பெட்ரோல் பங்க்கின் வரவு, செலவு கணக்குகள், தற்போதைய இருப்பு, வங்கிகளில் செலுத்தப்படும் கணக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் கம்ப்யூட்டரில் இருந்த ‘ஆர்ட்டிஸ்க்’ உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது

தொடர்ந்து செங்கம்–போளூர் சாலையில் உள்ள பாபுவுக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை மற்றும் ராஜவீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் அவர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னரும் 2 மணி வரை நடந்தது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாபுவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story