100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு,
2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
100 நாள் வேலை திட்டம்சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் தச்சாம்பாடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 200 தொழிலாளர்களுக்கு கடந்த 2½ மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அதன்பின்னரும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் தேவிகாபுரம்–சேத்துப்பட்டு சாலையில் தச்சாம்பாடி பஸ் நிறுத்தம் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
பேச்சுவார்த்தைஇந்த நிலையில் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் நாளை (திங்கட்கிழமை) தெரிவித்து அனைவருக்கும் ஊதியம் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் தேவிகாபுரம்–சேத்துப்பட்டு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரிசையாக நின்றன.