ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் பேட்டி


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் பேட்டி
x
தினத்தந்தி 19 March 2017 5:00 AM IST (Updated: 18 March 2017 9:49 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

மதுரை,

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரவையின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார்.

அவர் பேசும் போது, தமிழக அரசியலில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நமது இனத்தை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் வருங்காலத்தில் அரசியல் களத்தில் நமது இனத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் அதிக அளவில் தங்களை இணைத்துக் கொண்டு, நாடார் இனத்தை தமிழகத்தில் தலைநிமிர செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரையாற்றினார்.

பேட்டி

பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்லியில் கடந்த சிலநாட்களாக தமிழக விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி மேலாடை அணியாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு மத்திய–மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. அதனை தமிழக அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.

உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்துள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தோம். ஆனால் தமிழக பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வரவில்லை. ஆனால் வாட் வரியால் பெட்ரோல், டீசல் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்ததால் லாரி வாடகை கூடும். அதன் மூலம் அறிவிக்கப்படாத விலை ஏற்றம் ஏற்பட்டு அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. வெற்றி பெறும்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். ஏன் என்றால் ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. அங்குள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பெருந்தலைவர் மக்கள் கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது. எனவே இடைத்தேர்தலில் தி.மு.க. அணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணைத் தலைவர்கள் மாரியப்பன், சதாசிவம், இணைப் பொதுச்செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல், அமைப்பு செயலாளர் வெள்ளியராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story