சோழவந்தான் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடக்கம்
சோழவந்தான் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் ராட்சத கிரேன் மூலம் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
சோழவந்தான்,
சோழவந்தானில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. இதன் முதற்கட்ட பணிகளாக ரெயில்வே துறை சார்பில் பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
அந்த பணிகள் முடிந்த நிலையில், சுமார் 45 மீட்டர் நீளமும், 60 டன் எடையும் கொண்ட இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் நேற்று காலை 11.45 மணிக்கு தொடங்கியது.
இந்த பணிகள் நடைபெற்றதால் அந்த வழியாக சென்ற ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் ரெயில்வே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு ரெயில்வே கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் கண்ணன், பாலம் பிரிவு மூத்த பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் டீ.மேக்.சி.சி. 2000 என்ற ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு தடைஇதுகுறித்து செயற்பொறியாளர் கூறுகையில், மொத்தம் 5 இரும்பு கர்டர்களை பாலத்தில் பொருத்த 3 நாட்கள் ஆகும். 5 இரும்பு கர்டர்களும் 300 டன் எடை கொண்டது. ஒவ்வொரு இரும்பு கர்டரும் 45 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இரும்பு கர்டர்கள் பொருத்திய பின்பு சுமார் 25 டன் எடைக் கொண்ட இன்டர் கனெக்டிக் பிளேட் பொருத்தும் பணிகளும் நடைபெறும் என்றார்.
அப்போது ரெயில்வே இளநிலை பொறியாளர் குமாரசாமி, போக்குவரத்து ஆய்வாளர் மோகன்தாஸ், நிலைய கண்காணிப்பாளர் சாம்கிருபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ரெயில்வே மேம்பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிக்காக அவ்வழியே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.