போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
அதிகாலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால், பஸ்கள் இயக்கப்படவில்லை.
திருமங்கலம்,
திருமங்கலம்தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து கழகத்திற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் ஊழியர்களுக்கான பயன்கள் குறித்து அறிவிப்பு இல்லாததை கண்டித்து திருமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ்களை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. அதிகாலை 4.30 மணிக்கு பஸ்கள் அனைத்தும் பணிமனையில் இருந்து திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். அதன்பின்னர் அங்கிருந்து மதுரை உள்பட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். போக்குரவத்து ஊழியர்கள் நடத்திய இந்த போராட்டத்தால், நேற்று அதிகாலை நேரத்தில் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் அவதிப்பட்டனர்.
சோழவந்தான்சோழவந்தான் பணிமனையிலும் நேற்று காலை வழக்கம்போல் பஸ்கள் பணிமனையை விட்டு வெளியேற முற்பட்டபோது திடீரென போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை நுழைவு வாசலில் அமர்ந்து பஸ்களை வெளியே செல்ல முடியாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் காலை 6 மணி வரை நடந்தது. இதனால், பஸ்கள் பணிமனையிலேயே முடங்கியது. இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு மறியலை கைவிட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலூர்மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொழிலாளர்கள் நேற்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மேலூர் கிளை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன், பொருளாளர் திருவடி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யூ சங்க தலைவர் பாலு, செயலாளர் ரவிச்சந்திரன், மத்திய சங்க துணை பொது செயலாளர் மகாலிங்கம், பணிமனை சங்க செயலாளர் மாரியப்பன் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 3.45 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இப் போராட்டத்தால் 64 பஸ்கள் பணிமனையை விட்டு வெளியேறவில்லை. இதனால் காலையில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.