பேளுக்குறிச்சி அருகே பஸ் கண்ணாடி உடைப்பு; ஆட்டோ டிரைவர் கைது


பேளுக்குறிச்சி அருகே பஸ் கண்ணாடி உடைப்பு; ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 March 2017 3:45 AM IST (Updated: 18 March 2017 9:59 PM IST)
t-max-icont-min-icon

பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மோகனவேல்

சேந்தமங்கலம்

பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மோகனவேல் (வயது 24), ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் நாமக்கல்லில் இருந்து வெள்ளாளப்பட்டி வருவதற்காக ஒரு தனியார் பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். இதை கண்ட பஸ் கண்டக்டர் செந்தில்குமார் உள்ளே வருமாறு அழைத்தார். ஆனால், அவர் பஸ்சுக்குள் வர மறுத்ததால் கண்டக்டர் அவரை நாமக்கல்லிலேயே இறக்கி விட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த மோகனவேல் ஒரு மோட்டார் சைக்கிளில் பஸ்சை முந்திக்கொண்டு கல்குறிச்சி பிரிவு ரோட்டிற்கு வந்து நின்றார். அப்போது பயணிகளை இறக்குவதற்காக அந்த தனியார் பஸ் அங்கு வந்து நின்றது. உடனே, மோகனவேல் அந்த பஸ் மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து பஸ் கண்டக்டர் செந்தில்குமார் பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனவேலுவை கைது செய்தனர். பின்னர் அவர் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story