நல்லம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு போலீசார் விசாரணை


நல்லம்பள்ளி அருகே  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 10:01 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

நல்லம்பள்ளி,

பள்ளி மாணவன்

தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அருகே உள்ள கவலைக்காரன் கொட்டாய் மீனாட்சி தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலாளி. இவருடைய மகன் ஹரீஸ்ராஜ் (வயது 5). அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அங்குள்ள சீலக்காரியம்மன் கோவில் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.

அதன்பின்னர் இரவு வெகுநேரம் ஆகியும் மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் ஹரீஸ்ராஜின் தாயார் அம்சா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான திறந்த வெளி தண்ணீர் தொட்டியில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீரில் மாணவன் ஹரீஸ்ராஜ் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாணவனின் தாயார் அம்சா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவன் ஹரீஸ்ராஜ் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான திறந்த வெளி கிணற்றில் பள்ளி மாணவன் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story