மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
சேலம், மார்ச்.19–
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டிசேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சார்பில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
எடப்பாடி அரசு கலைக்கல்லூரியில் முதுகலை படிப்பு வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதுநிலை படிப்புகள் தொடங்கப்படும். எடப்பாடியில் கல்வியியல் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள்.
மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டம்மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டம், மேட்டூர்–ஓமலூர்–சங்ககிரி–எடப்பாடி ஆகிய 4 தொகுதி மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும். இந்த 4 தொகுதிகளிலும் 92 ஏரிகளில் நீர் நிரப்பி விவசாயத்தை செழிமைப்படுத்துவதற்காக இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே ஜெயலலிதா முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்மூலம் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
மேட்டூர் அணை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளை தூர்வாருவதற்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த திட்ட அறிக்கை கிடைத்தபின்பு, அனைத்து அணைகளும் தூர்வாரப்படும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் கர்நாடக அரசு அனுமதி பெற வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தங்களிடம் இதுவரை அனுமதி பெறவில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.