டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவது அ.தி.மு.க. விதிகளுக்கு முரணானது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவது அ.தி.மு.க. விதிகளுக்கு முரணானது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 19 March 2017 5:00 AM IST (Updated: 19 March 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவது அ.தி.மு.க. விதிகளுக்கு முரணானது: இரட்டை இலை சின்னம் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி,

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 22–ந் தேதி அ.தி.மு.க.வின் இரு அணியினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்:– இந்திய தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. சார்பில் நாங்கள் கழக சட்ட விதிப்படி, எங்களுடைய நியாயமான வாதங்களை ஏற்கனவே முன் வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 22–ந் தேதி மேலும் விவரங்களை கேட்பதற்காக எங்களை அழைத்து இருக்கிறார்கள். அப்போதும் எங்களின் நியாயமான வாதங்களை எடுத்துரைப்போம்.

தேர்தல் பிரசார வியூகம்

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதியில் உங்களின் தேர்தல் பிரசார வியூகம் எப்படி இருக்கும்?

பதில்:– மக்கள் இயக்கமாக தான் அ.தி.மு.க. இருக்க வேண்டும். எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியும், ஆட்சியும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் எங்களின் பிரசாரம் அமையும்.

கேள்வி:– ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளாரே?

பதில்:– தீபா உள்பட ஜெயலலிதாவின் கொள்கைகள், கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஆதரவு தருபவர்களோடு இணைந்து செயல்படுவோம்.

தனிக்கட்சி தொடங்குவீர்களா?

கேள்வி:– இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:– இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை. அது உறுதியாக எங்களுக்கு தான் கிடைக்கும். கழகத்தின் விதிப்படி பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். தற்காலிக பொதுச்செயலாளர் என்பதே கிடையாது. ஒரு அசாதாரண சூழ்நிலையில் பொதுச்செயலாளர் இல்லாமல் போகும் போது, புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும் வரையில், தலைமை நிலையில் இருப்பவர்கள் கட்சி பணியாற்றுவார்கள் என்பது சட்ட விதி. பொதுச்செயலாளருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அவைத்தலைவர் மதுசூதனன். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது பொருளாளராகிய நான். எனவே பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்களோ, எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ தேர்வு செய்தது தவறானது.

கேள்வி:– அப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் உள்ளதா?

பதில்:– நாங்கள் தான் அ.தி.மு.க., கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது.

கேள்வி:– உங்களிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வேறு யாரேனும் பேசுகிறார்களா?

பதில்:– அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழக பட்ஜெட் குறித்து...

கேள்வி:– தமிழக பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:– சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். இங்கு வெறும் கரண்டியை காட்டி இருக்கிறார்கள். வாங்கும் கடன், அதன் வட்டி ஆகியவற்றை மூலதன செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துகிறதா என்பதை பார்க்க வேண்டும். கடனையும், வட்டியையும் மூலதன செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் பொருளாதார நிலை உயரும். நமக்கு வருமானம் வரும் நிலை உயரும். அப்போது தான் கடனையும், வட்டியையும் அடைக்க முடியும். கடனை மட்டும் வாங்கிக் கொண்டே போனால், ஒரு காலத்தில் அது முட்டி மோதி நிற்கும்.

கேள்வி:– மற்ற கட்சிகள், அமைப்புகளிடம் ஆதரவு கேட்பீர்களா?

பதில்:– ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை பிடித்து எங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களின் ஆதரவை ஏற்றுக்கொள்வோம்.

சட்ட விதிகளுக்கு முரணானது

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவது அ.தி.மு.க. சட்டவிதிக்கு உட்பட்டதா?

பதில்:– பொதுச்செயலாளரே கழக விதிப்படி தேர்வு செய்யப்படாதவரால் அவரே புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ, ஏற்கனவே உள்ளவர்களை நீக்கவோ முடியாது. அப்படி இருக்கும்போது டி.டி.வி.தினகரனை ஒரே நாளில் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்துள்ளனர். 2011–ல் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா அதன் பிறகு அவரை சேர்க்கவே இல்லை. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ஒருவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட குறைந்தது 5 ஆண்டு காலம் அவகாசம் இருக்க வேண்டும். இதனால் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ‘ஆண்டிப்பட்டி அருகே உங்களின் கார் மீது கல், செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பியபோது, ‘நான் எப்போதும் வன்முறையை விரும்ப மாட்டேன்’ என்று அவர் பதில் அளித்தார்.


Next Story