சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


சாலையில் காட்டு யானை நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2017 3:45 AM IST (Updated: 19 March 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

அய்யங்கொல்லி அருகே சாலையில் காட்டு யானை வந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சேரம்பாடி வனச்சரகர் மனோகரன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் ராமச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் சுப்பிரமணி உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் காட்டு யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை அங்கிருந்து செல்லவில்லை. இதனால் விடிய விடிய வனத்துறையினர் விரட்டியும் பலன் இல்லாமல் போனது. இதனால் தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. இதனால் வனத்துறையினர் அதனை விரட்ட முடியாமல் திணறினர்.

போக்குவரத்து பாதிப்பு

நேற்று காலை 7 மணிக்கு பந்தலூர்–கொளப்பள்ளி செல்லும் சாலையில் வந்து காட்டு யானை நின்றது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினர். இதனால் அப்பகுதியில் உள்ள வனத்துக்குள் காட்டு யானை சென்றது. மேலும் ¾ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இருப்பினும் மீண்டும் ஊருக்குள் காட்டு யானை வரக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினால் வனப்பகுதிக்கு செல்கிறது. பின்னர் சில மணி நேரத்தில் மீண்டும் ஊருக்குள் திரும்பி விடுகிறது. வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.


Next Story