சாவக்கட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


சாவக்கட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

சாவக்கட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவினாசி,

அவினாசி வட்டார பகுதிகளில் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக அடிக்கடி பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. தத்தனூர் ஊராட்சி, சாவக்கட்டுப்பாளையம் ஊராட்சி, சக்திநகர், சாவக்கட்டுப்பாளையம் வடக்கு, சந்தை மேடு, பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நேற்றுகாலை இப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் சாவக்கட்டுப்பாளையத்தில் பழைய ஊராட்சி அலுவலகம் எதிரில் அவினாசி–நம்பியூர் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது ‘‘எங்கள் பகுதிக்கு மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

22–ந் தேதிக்குள்...

கடந்த ஒரு வருடமாக இதே நிலை தான் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. தினசரி குடிநீருக்காக அலைவதே எங்களுக்கு வேலையாகி விட்டது. சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வருவதில்லை. எனவே அங்கு குடிநீர் ஏற்றி எங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டோம்’’ என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி தாசில்தார் அருணா மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வருகிற 22–ந் தேதிக்குள் குடிநீர் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.


Next Story