மாநகராட்சியின் கழிவுநீர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


மாநகராட்சியின் கழிவுநீர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 March 2017 3:00 AM IST (Updated: 19 March 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சியின் கழிவுநீர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லம்பாளையம் பகுதியில் பிரதான சாலை மற்றும் சில வீதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் ஒரு இடத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கழிவுநீரை, மாநகராட்சியின் கழிவுநீர் லாரி மூலம் உறிஞ்சி, வேறு பகுதியில் உள்ள பிரதான கால்வாயில், அவற்றை திறந்து விட்டு வருகிறார்கள். இதுபோல் நேற்று அந்த பகுதியில் தேங்கிய கழிவுநீரை மாநகராட்சி கழிவுநீர் லாரி மூலம் ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் லாரியில் எடுக்கப்பட்ட கழிவுநீரை, மற்றொரு வீதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் ஊழியர்கள் திறந்து விட்டனர். இதற்கு அந்த வீதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கழிவுநீர் லாரியை சிறைபிடித்தனர். அத்துடன், அவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசப்படுத்தினார்கள். பின்னர், கழிவுநீரை ஒற்றைக்கண் பாலம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் திறந்து விடுகிறோம் என்றும், குடியிருப்பு பகுதியில் இனி திறந்து விடமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கழிவுநீர் லாரியை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story