போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் முதல்–அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் முதல்–அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2017 3:45 AM IST (Updated: 19 March 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.4¾ கோடி செலவில் புதிய கட்டிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலைய கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால், பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் போலீஸ நிலையத்தில் உள்ள மழைநீர் ஒழுகியதால், ஆவணங்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து ரூ.86 லட்சத்து 98 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இதேபோன்று பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியின் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ரூ.48 லட்சத்து 48 ஆயிரம் செலவிலும், பொள்ளாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வளாகத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் ரூ.42 லட்சத்து 5 ஆயிரம் செலவிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. புதிய கட்டிடத்தில் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டருக்கு தனி அறையும், கைதிகள் அறை, ஆவணங்கள் பாதுகாப்பு அறை, ஓய்வறை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து அவசர சிகிச்சை, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் செலவிலும், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதிக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.பொள்ளாச்சியில் போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் கட்டப்பட்டு உள்ள ரூ.4 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள புதிய கட்டிடங்கள் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய கட்டிடங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தமிழ்மணி, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

இதேபோன்று போலீஸ் நிலையங்களில் போலீசார் இனிப்பு வழங்கினார்கள். பொள்ளாச்சியில் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதால் போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story