கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


கோவை,திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,313 கோடி வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.20 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவை கலெக்டர் அலுவலகம் சென்ற அவர், அங்கு ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மற்றும் அதன் அருகே உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசினார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 மாவட்டங்களுக்கான ரூ.1,313 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 6,200 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:–

110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்

‘அம்’ என்றால் தெய்வீகம், ‘மா’ என்றால் அளவில்லாத என்று பொருள். அளவிடற்கரிய தெய்வத்தன்மை பொருந்தி, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சக்தியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது இதய தெய்வம் ஜெயலலிதா அவர்கள். இந்த அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள்ளேயே பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பேறினை நான் பெற்றிருக்கிறேன்.இந்த திட்டங்களில் பெரும்பாலானவை விதி 110–ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களாகும். இத்திட்டங்கள் பல நிறைவு செய்யப்பட்டு விட்டன. மீதம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் நகரம்

வாழ்வாதாரத்திற்கு விவசாயம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு பொருளாதாரத்திற்கு தொழில் மிகவும் முக்கியம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை நகரம், தமிழ்நாட்டில் பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்டோமொபைல் மற்றும் ஜவுளித் தொழிலில் அதிகம் பேர் ஈடுபடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும் தொழில் உற்பத்தியிலும் ஜவுளித் தொழில், அதிலும் குறிப்பாக, கைத்தறி, முக்கிய பங்கு வகிக்கிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும், நெசவாளர்கள் வாழ்வு வளம் பெறவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெசவாளர்களுக்கு உதவி

நெசவாளர்களுக்கென 10 ஆயிரம் சூரிய சக்தி மின்சாரத்துடன் கூடிய, பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மின் மோட்டார் பொருத்தப்பட்ட 6 ஆயிரம் பெடல் தறிகள் வழங்கப்பட்டுள்ளன. மின் மோட்டார் பொருத்திய தார் மற்றும் எந்திரங்கள் 25 ஆயிரம் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, மின்சார பாவு சுற்றும் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெசவாளர்கள் தொழில் முதலீடு மற்றும் நடைமுறை மூலதனக்கடன் பெறும் வகையில் நெசவாளர்களுக்கான கடன் அட்டை வழங்கும் திட்டம் 2012–2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், நெசவாளர்கள் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற இயலும். வட்டியில் 3 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளமிக்க மாவட்டங்கள். 2015–ம் ஆண்டு முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜெயலலிதா வெற்றிகரமாக நடத்தி 4 கோடியே 70 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில் 2 கோடியே 42 லட்சம் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அடுத்த முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்த அரசு நடப்பாண்டில் வெற்றிகரமாக நடத்தும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒற்றைச் சாளர முறையினை செம்மைபடுத்தி முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனடியாக வழங்கி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வழிவகையை அரசு செய்து வருகிறது.

தேயிலை தொழில்

தேயிலை தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது..தனியார் தேயிலை ஏல மையங்களில் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்பதால், அரசு ஒரு தனி ஏல மையத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன விலங்குகளால் மனிதர்களுக்கு உயிர் இழப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்படும்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1½ லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் வறட்சி காலங்களில் வன உயிரினங்களுக்கு தேவையான நீரினை வழங்குவதற்கு தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சாயப்பட்டறை கழிவு நீர்

பின்னலாடை தொழிலின் ஏற்றுமதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக திருப்பூர் விளங்குகிறது. அங்கு நடைபெறும் பின்னலாடை தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு திருப்பூரில் சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்தது.

112 கோடியே 50 லட்சம் ரூபாயை மானியமாக வழங்கி 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியது. சாயப்பட்டறை கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ய நிலையை கொண்டு வரும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள். அம்மா அவர்களின் மதிநுட்பத்தால் திருப்பூர் ஜவுளித் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புதிய வாழ்க்கை கிடைத்தது என்பதை நீங்கள் யாரும் மறக்க முடியாது.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நடைபெற்று வரும் பூஜ்யநிலை கழிவு நீர் பணியானது பல்வேறு நிலைகளில் உள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில், பேருந்து நிலையம் அருகில் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.

நீராவுக்கு அனுமதி?

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தென்னை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தென்னை மரம் இன்றியமையாததாக விளங்குகிறது. தென்னை மரத்திலிருந்து பெறப்படும் புதிய சாறு ‘‘நீரா’’ எனப்படும். இது ஆல்கஹால் இல்லாத இயற்கையான சத்து மிகுந்த ஆரோக்கிய பானம். தென்னையில் இருந்து கிடைக்கும் மற்ற லாபத்தை விட, நீராவும் அதன் உபபொருள்களும் விவசாயிகளுக்கு மிகுந்த லாபத்தையும் பலனையும் அளிக்கக்கூடியது என்பதால் ‘‘நீரா’’ தயாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று தென்னை விவசாயிகள் கோரி வருகின்றனர். இம்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்து நீரா தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், நீரா தயாரிக்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.1313 கோடியில் திட்டங்கள்

ஈரோடு தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த நகரமாக விளங்குகிறது. விசைத்தறி கைத்தறி மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், ஈரோடு ஜி.எச். ரவுண்டானா அருகில், ஈரோடு–பெருந்துறை–காங்கேயம் மேம்பாலத்திற்கு 20.1.2014 அன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 58 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணி தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 1313 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள 8.,031 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

‘‘அரசு நலத்திட்ட உதவியினைப் பெறுகின்ற பயனாளிகள் அனைவரும் அவற்றை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகக் கருதி மேன்மேலும் உழைத்து, வாழ்க்கையில் முன்னேறி, எல்லா நலன்களையும் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்– எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், பொள்ளாச்சி மகேந்திரன், ஏ.கே.செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.அர்ச்சுனன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ், கஸ்தூரி வாசு, தனியரசு, திருப்பூர் குணசேகரன், நடராஜன், தோப்பு வெங்கடாசலம், விஜயகுமார், கே.வி.ராமலிங்கம், ஈஸ்வரன், ராஜா, குன்னூர் சாந்திராமு, அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story