ஆரல்வாய்மொழியில் இளம்பெண் கொலையில் கணவன் கைது


ஆரல்வாய்மொழியில் இளம்பெண் கொலையில் கணவன் கைது
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் இளம்பெண் கொலையில் அவரது கணவனை போலீசார் கைது செய்தனர். பலருடன் மனைவி தொடர்பு வைத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ஆதித்தன்(வயது 31). செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கில்டா ராணி என்கிற ஷாலினி(27). இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கில்டா ராணி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த கில்டா ராணி படுகொலை செய்யப்பட்டார். படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்த கில்டாராணியின் கழுத்து, கைகளில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருந்த காயங்கள் இருந்தன. படுக்கை அறையில் அவரது செல்போனும் கிடந்தது.

கணவன் கைது

இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கில்டா ராணியின், செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய 7 வாலிபர்களை பிடித்து கடந்த 3 நாட்களாக போலீசார் விசாரித்தனர். இதில் எந்த துப்பும் துலங்க வில்லை.

கொலை நடந்த அன்று இரவு கில்டா ராணி வீட்டின் எதிர்புறம் உள்ள செங்கல் சூளையில் அவரது கணவர் ஆதித்தன் வேலைசெய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். உடனே போலீசாரின் பிடி மேலும் இறுகியது. கடைசியில் தனது மனைவி கில்டா ராணியை கொலை செய்ததை ஆதித்தன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் ஆதித்தனை கைது செய்தனர்.

வாக்குமூலம்

கைதான ஆதித்தன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடன் பிறந்தவர்கள் 3 பேர். நான் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறேன். 21.2.2011-ந் தேதி வீரவநல்லூரை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகள் கில்டா ராணியை காதல் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 1 வருடத்துக்கு முன்பு இருந்து அவளுடைய நடவடிக்கை எனக்கு பிடிக்க வில்லை. அவள் பலருடன் தொடர்பு வைத்து கொண்டதால், நான் அவளைவிட்டு பிரிந்து விட்டேன்.

திருமணம்

பின்னர் மார்த்தாண்டம் அருகே உள்ள மஞ்சாலுமூடை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம்செய்து கொண்டு தனியாக வாழ்கிறேன். சில நேரங்களில் கில்டா ராணி பல பேருடன் நெருங்கி பழகியது என் நினைவுக்கு வரும். கடந்த 14-ந் தேதி அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். அன்று அவள் வீட்டு எதிரே உள்ள செங்கல் சூளையில் ‘தீ‘ போட்டுக்கொண்டிருந்தேன். நள்ளிரவு 1 மணிக்கு மலம் கழிக்க செல்வதாக கூறிவிட்டு கில்டா ராணி வீட்டுக்கு சென்றேன். முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பின் பக்கமாக சென்று கதவை திறந்து உள்ளே சென்றேன். படுக்கை அறையில் கில்டா ராணி மல்லாக்க படுத்து கிடந்தாள். என்னை பார்த்ததும் எழுந்து இருந்தாள். அப்போது அவளிடம் பல பேருடன் தொடர்பு வைத்து இருப்பது குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தேன். அவள் என்னை மதிக்காமல் எதிர்த்து பேசினாள்.

தலையணையால்....

மேலும் அப்படித்தான் தொடர்பு வைப்பேன் என்று கூறினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே நான் காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தில் குத்தினேன். கையால் தடுத்தாள். நான் மீண்டும் குத்தினேன். பின்னர் தலையணையை அவளது முகத்தில் வைத்து அமுக்கினேன். இதில் அவள் மூச்சுதிணறி செத்தாள். பின்னர் கத்தியில் உள்ள ரத்தத்தை போர்வையில் துடைத்துவிட்டு, அவள் அணிந்து இருந்த நைட்டியை இடுப்புக்கு மேலே தூக்கி, அவளை நிர்வாணமாக்கி வைத்தேன். பிறகு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுவிட்டேன்.

மறுநாள் என் மனைவியை யாரோ கொலை செய்து விட்டனர் என்று போலீசில் புகார் கொடுக்க சென்றேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story