உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா தொடக்கம்


உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா தொடங்கியது.

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தெப்ப ஆஸ்தான மண்டபத்தில் கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப திருவிழா வருகிற 24-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று முதல் வருகிற 22-ந் தேதி வரை தினமும் நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தினமும் ஒரு அலங்காரத்தில் புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளி இரவு 7.45 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 8.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி இரவு 8 மணி வரை தெப்பம் கண்டருளுகிறார். தொடர்ந்து பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் தெப்ப மண்டபம் சேருகிறார். இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

பந்தக்காட்சி

நிறைவு நாளான 24-ந் தேதி பந்தக்காட்சி நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 வரை தாயார் திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு பந்தக்காட்சியில் வீதிஉலா வந்து தெப்ப மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர். 

Next Story