நங்காஞ்சி ஆற்று தடுப்பணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை


நங்காஞ்சி ஆற்று தடுப்பணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே நங்காஞ்சி ஆற்று தடுப்பணையை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி,

பழனி பரப்பலாறு அணையில் இருந்தும், சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்தும் நீர் சேகரமாகி அப்பகுதி மலையடிவாரத்தின் வழியாக ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி மலையடிவாரத்தில் தலைக்குத்து என்றழைக்கப்படும் தலை ஊற்று என்ற இடத்தில் தேங்கி நங்காஞ்சி ஆறு உருவாகிறது. இந்த நங்காஞ்சி ஆறு இடையகோட்டை, பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி செல்கிறது. அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளைபுதூரில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இதில் ஒரு பெரிய வாய்க்காலும், ஒரு சிறிய வாய்க்காலும் பிரிந்து செல்வதற்கு மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் பல ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தடுப்பணை 7 அடி உயரம் இருந்தது. ஆனால் தற்போது மணல் சேர்ந்து 2 அடி உயரம் மட்டுமே உள்ளது.

நீர்மட்டம்

தடுப்பணை மிக ஆழமாக இருந்தால் தண்ணீர் தேங்கி இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் இப்பகுதியை சுற்றியுள்ள கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்தது. விவசாயத்திற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தற்போது தடுப்பணையில் நீர் தேங்கி நிற்க வழியில்லாததால், மழைக்காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் வரும்போதுதேங்கி நிற்காமல் சென்றுவிடுகிறது.

கோரிக்கை

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயராமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் அரவக்குறிச்சி அருகே உள்ள நங்காஞ்சி ஆற்றில் மதகுடன் கூடிய தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story