அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 30 பேர் மீது வழக்குப்பதிவு


அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 30 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 March 2017 2:17 AM IST (Updated: 19 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 30 பேர் மீது வழக்குப்பதிவு

தாமரைக்குளம்,

அரியலூர் கயர்லாபாத் பகுதியில் அரசு சிமெண்டு ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர் முருகேசன் நீண்ட நாட்கள் விடுப்பில் சென்று விட்டு தற்போது தான் பணிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உயர் அதிகாரியிடம் தனக்கு கூடுதல் நேரம் பணி செய்ய அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இவருக்கு தங்கவேல் (வயது36) என்பவர் அதிகாரிகளிடம் சிபாரிசு செய்துள்ளார். ஆனால் முருகேசனுக்கு கூடுதல் நேரம் வழங்குவது குறித்து முடிவெடுப்பதில் தாமதம் ஆனது. இந்த நிலையில் மீண்டும் அதே கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகள் முத்துசெல்வி, முத்துசெல்வனிடம் (33) தங்கவேல் முறையிட்டார். அதற்கு முத்துசெல்வன், முருகேசனின் உடல்நிலை குணமாகவில்லை, அவருக்கு கூடுதல் நேரம் வழங்கினால் உடல்நிலையில் பிரச்சினை ஏற்படும் என்று கூறினார். இதில் கோபடைந்த தங்கவேல், முத்து செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முத்துசெல்வனை தாக்கியுள்ளார். இதனை உதவி பொறியாளர் செல்வகுமார் தடுத்துள்ளார். இதனால் செல்வகுமாரையும் அவர்கள் தாக்கினர். மேலும் செல்வகுமாரின் வீட்டில் நின்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். தாக்குதலின்போது அலுவலக அறையின் கண்ணாடி கதவுகள், பொது மேலாளர் அறையிலிருந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் கல்லங்குறிச்சியை சேர்ந்த தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் செல்வகுமார், முத்துசெல்வன் ஆகியோர் மீதும், தொட்டியம் பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் தங்கவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 30 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story