சத்தீஷ்கார் மாநில போலீசாருக்கு 4 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் திருச்சியில் தயாரிப்பு


சத்தீஷ்கார் மாநில போலீசாருக்கு 4 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் திருச்சியில் தயாரிப்பு
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்கார் மாநில போலீசாருக்கு 4 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் திருச்சியில் தயாரிக்கப்படுவதாக தொழிற்சாலை பொதுமேலாளர் அப்பாராவ் தெரிவித்தார்.

திருவெறும்பூர்,

திருச்சி நவல்பட்டு அருகே துப்பாக்கி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவ துறை மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள போலீசாருக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் 216-வது ஆண்டு படைக்கல தொழிற்சாலை தினம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் புதிதாக தயாரிக்கப்படும் ‘அசால்ட் ரைபிள்’ எனும் துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த துப்பாக்கி சத்தீஷ்கார் மாநில போலீசாருக்காக இங்கு தயாரிக்கப்படுகிறது. முதல் துப்பாக்கியை தொழிற்சாலையின் பொதுமேலாளர் அப்பாராவ், சத்தீஸ்கார் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. ரத்தன் லாலிடம் வழங்கினார்.

4 ஆயிரம் துப்பாக்கிகள்

புதிய துப்பாக்கி குறித்து பொதுமேலாளர் அப்பாராவ் நிருபர்களிடம் கூறுகையில், “புதிய தொழில்நுட்பத்துடன் இந்த ரக துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது. இது ஏ.கே. 47 ரக துப்பாக்கிக்கு இணையானது. சத்தீஷ்கார் மாநில போலீசாருக்கு மொத்தம் 4 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரித்து கொடுக்க ஆணை பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 200 துப்பாக்கிகள் தயாரித்து கொடுக்கப்பட உள்ளது. இந்த துப்பாக்கி எதிரிகளை மிக துல்லியமாக தாக்க கூடியது. 300 மீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்த்து சுட முடியும். அதி நவீன வசதிகள் கொண்டதாகும். மேலும் ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு தேவையான துப்பாக்கிகள் தயாரிக்க ஆணை வர உள்ளது” என்றார். இதில் முதன்மை தர அதிகாரி மனோகரன், கூடுதல் பொது மேலாளர்கள் கோபி, அங்குவேல், சுந்தர மூர்த்தி, துணை பொது மேலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊழியர்கள், அதிகாரிகள் தனி நபர், தேச பாதுகாப்பு குறித்த உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கண்காட்சி

தொழிற்சாலை தினத்தையொட்டி நேற்று மாலை துப்பாக்கி கண்காட்சி நடந்தது. இதில் பழமையான மற்றும் நவீன ரக துப்பாக்கிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 2-வது உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், போரின் போது பாகிஸ்தானிடம் இருந்து கைப்பற்றபட்ட துப்பாக்கிகள் இடம்பெற்றிருந்தன. துப்பாக்கிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். மேலும் அதன் தன்மை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அதிகாரிகளும் துப்பாக்கியின் ரகம் குறித்து எடுத்துரைத்தனர். கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. 

Next Story