8-வது ஊதியக்குழுவை அமைக்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி


8-வது ஊதியக்குழுவை அமைக்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

8-வது ஊதியக்குழுவை அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் பேரணி நடைபெற்றது.

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூரில் ரெயில் நிலையத்தில் பேரணி தொடங்கியது. பேரணிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஞானதம்பி அனைத்து அரசு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குருசந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில செயலாளர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும். 1.1.2016 முதல் அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை நிறுத்திவிட்டு, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வட்ட செயலாளர் தியாகராஜன், வட்ட பொருளாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி ரெயில் நிலையத்தில் புறப்பட்டு பஸ் நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. 

Next Story