ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சையில் 3 இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2 மணி நேரம் பஸ்களை இயக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் 65 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு போக்குவரத்து கழக ஓய்வூதிய நம்பகம் மூலம் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதாலும், அரசின் நிதி உதவி இல்லாததாலும் ஓய்வூதிய நம்பகம் காலாவதியாகி கடந்த டிசம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அரசின் உதவியுடன் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கு தலா 2 தவணையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிப்ரவரி மாத ஓய்வூதியம் மார்ச் 15–ந்தேதி வழங்கப்படும். அதற்கடுத்த ஓய்வூதியம் வழங்க 2 மாதங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஓய்வூதியத்தை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதி அளித்தார்.

ஆர்ப்பாட்டம்


ஆனால் அமைச்சர் உறுதி அளித்தபடி ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஓய்வூதியர்கள் 16–ந்தேதி மண்டல தலைமை அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை இல்லை. இதையடுத்து போக்குவரத்துக்கழகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆலோசனை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணியில் உள்ள தொழிலாளர்கள் 18–ந்தேதி அதிகாலையில் பஸ்களை இயக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர கிளையில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் ஜெயவேல்முருகன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் 2 இடங்கள்


ஆர்ப்பாட்டத்தில் டி.எம்.எம்.கே. சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் மோகன்ராஜ், ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் அப்பாதுரை, மல்லி.தியாகராஜன், பீர்தம்பி, கணேசன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் தஞ்சை புறநகர் கிளை, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ஆகிய 2 இடங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


Next Story