ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்தம் : ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம்


ஊரக வளர்ச்சித்துறையினர் வேலை நிறுத்தம் : ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தாமதம்
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

திண்டுக்கல்,

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் பணிகளை தேர்தல் கமி‌ஷன் முடுக்கிவிட்டு உள்ளது. சட்டமன்ற வாரியான வாக்காளர் பட்டியலை மையப்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர்பட்டியலை தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதே போல வாக்குச்சாவடிகளை முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகளை முடித்து, வருகிற 21–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நகர பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால், ஊரக பகுதிகளில் தொடங்கிய வேகத்திலேயே பணிகள் முடங்கிவிட்டன. இதற்கு, ஊரக வளர்ச்சித்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம்தான் காரணமாகும்.

அறிக்கை அளிப்பதில் சிக்கல்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு செல்லவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள அவர்கள், ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் போன்ற போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் சமையல் செய்து சாப்பிட்டு, அங்கேயே காத்திருக்கும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். அவர்களின் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.

ஊரக வளர்ச்சித்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வார்டு வாரியாக சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் இருக்கும் 306 ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும், வருகிற 21–ந்தேதிக்குள் தேர்தல் கமி‌ஷனுக்கு அறிக்கை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story