பெருங்களத்தூரில் பயங்கரம் சுத்தியலால் அடித்து கணவரை கொன்ற 2–வது மனைவி கைது


பெருங்களத்தூரில் பயங்கரம் சுத்தியலால் அடித்து கணவரை கொன்ற 2–வது மனைவி கைது
x
தினத்தந்தி 19 March 2017 3:02 AM IST (Updated: 19 March 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

பிரிந்து வாழ்ந்த முதல் மனைவியை பார்த்து விட்டு வந்ததால் ஆத்திரத்தில் கணவரை சுத்தியலால் அடித்துக்கொலை செய்த 2–வது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஆர்.எம்.கே. நகர், லால் பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 40). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய முதல் மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேபி, தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் விழுப்புரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதையடுத்து கணேஷ், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சத்யா(32) என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டு பெருங்களத்தூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு 9 வயதில் சசிகுமார் என்ற மகன் உள்ளார்.

முதல் மனைவியை பார்க்க சென்றார்

கடந்த வாரம் கணேஷ், விழுப்புரத்துக்கு சென்று அங்கு தனியாக வசித்து வரும் தனது முதல் மனைவி பேபி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு வந்தார். இதை அறிந்த சத்யா, ஆத்திரம் அடைந்தார். பிரிந்து வாழ்ந்த முதல் மனைவியை பார்க்க சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவருடன் சண்டையிட்டார். கடந்த ஒரு வாரமாக கணவன்–மனைவி இடையே தினமும் இதுதொடர்பாக தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது.

கணேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தினமும் இரவில் குடித்து விட்டு வந்து மனைவியுடன் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சத்யா, தாலி கட்டிய கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த சுத்தியலால் கணேஷின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கணேஷ் சரிந்து விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, செய்வதறியாது திகைத்தார். பின்னர் வீட்டில் இருந்து பதற்றத்துடன் வெளியே ஓடி வந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் எனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது என்றார்.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில் விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், கணேஷை பரிசோதனை செய்து விட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

2–வது மனைவி கைது

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பீர்க்கன்கரணை போலீசார், சத்யாவிடம் விசாரித்தனர். முதலில் அவர், குடிபோதையில் கணேஷ் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக கூறினார். மேலும் விசாரித்த போது, போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்ததில், சுத்தியலால் அடித்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார், கொலையான கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது 2–வது மனைவி சத்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story