ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும்


ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கடந்த கல்வி ஆண்டில் ஓய்வுபெற்ற பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா, 2015–2016–ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற பணிபுரிந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஈரோடு யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமை தாங்கினார். ஈரோடு செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சு.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பாராட்டு

விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் கடந்த கல்வி ஆண்டில் ஓய்வுபெற்ற பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர் பேசியதாவது:–

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்குமா என்றார்கள். மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி 100 ஆண்டு காலம் நீடிக்கும். அனைத்து திட்டங்களும் ஆசிரியர்களை வாழ வைக்கும் திட்டமாக இருக்கும். நல்ல போதனை, சிந்தனை, மனிதநேயம் ஆகியவை ஆசிரியர்களிடம் இருப்பதால்தான் ஈரோடு மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது.

ஆசிரியர்கள் பணியில் நிறை குறைகள் உள்ளதாக தெரிகிறது. எனவே அவர்களின் குறைகளை களையும் வகையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து இன்னும் ஒருவாரத்துக்குள் பேச்சுவார்தை நடத்த முடிவு செய்துள்ளேன். அரசு பள்ளிக்கூடங்களில் வகுப்பறையை சுத்தம் செய்ய ஆசிரியர்களே இப்போது பொறுப்பு ஏற்கும் நிலை உள்ளது. இதை களையும் வகையில் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்று எதிர்வரும் பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட உள்ளது.

ஏழைகள் இல்லாத...

இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். வரலாற்று சின்னங்கள், ஆராய்ச்சி, ஆங்கில போதனை உள்ளிட்ட பயிற்சிகள் ஜூன் மாதம் 13–ந் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும். ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் என்று மறைந்த முதல் –அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஏழைகள் இல்லாத தமிழகத்தை ஆசிரியர்களால் மட்டுமே உருவாக்க முடியும். ஏழைகளின் ஆட்சியாக இந்த அரசு இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, கோபி கல்வி மாவட்ட அதிகாரி கலைச்செல்வன், தொடக்க கல்வி அதிகாரி ஆறுமுகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர் மனோகரன், யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட தாளாளர் கே.சரஸ்வதி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் வரவேற்று பேசினார். முடிவில் ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மகாராஜன் நன்றி கூறினார்.


Next Story