குடிக்காதே என்று தட்டிக்கேட்டதால் மகன் அருந்திய விஷத்தை பிடுங்கி குடித்த தாய் சாவு
குடிக்காதே என்று தட்டிக்கேட்டதால் மகன் அருந்திய விஷத்தை பிடுங்கி குடித்த தாய் சாவு ஆஸ்பத்திரியில் மகன் உயிருக்கு போராட்டம்
பெருந்துறை,
குடிக்காதே என்று தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மகன் அருந்திய விஷத்தை பிடுங்கி குடித்த தாய் இறந்தார். ஆஸ்பத்திரியில் மகன் உயிருக்கு போராடி வருகிறார்.
குடிப்பழக்கத்தால்...
ஈரோடு திண்டல் அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம் குட்டைக்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. அவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 82). இவர்களுடைய மகன் நல்லசாமி (46). மருமகள் தீபா (34). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
குழந்தைசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் செல்லம்மாள் மகன் நல்லசாமியுடன் வசித்து வந்தார். நல்லசாமி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் இருந்ததால் நாள் தோறும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் நல்லசாமி ஊர் சுற்றி வந்தார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
விஷம் குடித்தனர்...
நேற்று முன்தினம் இரவும் நல்லசாமி மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் மனைவி தீபாவும், தாய் செல்லம்மாளும், ‘ஏன் இப்படி குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாய்‘ என்று தட்டிக்கேட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த நல்லசாமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, உடனே வீட்டுக்குள் வைத்திருந்த தோட்டத்துக்கு பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார்.
மகன் விஷம் குடிப்பதை பார்த்த செல்லம்மாள், ‘நீ இறந்தபின்னர் எனக்கு என்ன வேலை‘ என்று நல்லசாமி குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை பிடுங்கி தானும் குடித்துவிட்டார்.
மூதாட்டி சாவு
விஷம் குடித்ததால் தாய், மகன் 2 பேரும் மயங்கிவிழுந்தார்கள். இதைப்பார்த்த தீபா உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளி த்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்லம்மாள் நேற்று இறந்துவிட்டார். நல்லசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.