பாப்ஸ்கோ பல்நோக்கு ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியம் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பாப்ஸ்கோ பல்நோக்கு ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியம் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை
புதுச்சேரி
பாப்ஸ்கோ பல்நோக்கு ஊழியர்களுக்கு தினக்கூலி ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் பிரேமதாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பணிநிரந்தரம்புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பல்நோக்கு ஊழியர்கள் சம்பளம் வழங்கக்கோரி கடந்த 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையை இதுவரை தீர்க்காமல் பாப்ஸ்கோ நிறுவனம் அவர்களை போராட்டத்திற்கு தள்ளி உள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களை பணிநிரந்தரம் செய்தபோது அதற்கான ஒப்புதல் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முதல்–அமைச்சர் வரை பெறப்பட்டாலும் அந்த கோப்பு கவர்னருக்கு அனுப்பப்படாமல் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதையே காரணமாக கூறி அந்த 511 ஊழியர்களுக்கு நிரந்த ஊதியத்தை வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வந்தது.
தினக்கூலி ஊதியம்இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின்போது பணிநிரந்தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கவர்னருக்கு கோப்பினை அனுப்பி ஒப்புதல் பெற்று புதுவை அரசிடம் கூடுதல் நிதியை பெற்று செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஊதிய நிலுவையை வழங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 தவணைகளாக ரூ.10 ஆயிரம் வீதம் முன்பணமாக வழங்குவது என்றும் ஒத்துக்கொண்டு அந்த ஊழியர்கள் முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெற்றனர்.
அதற்கடுத்து பாப்ஸ்கோ நிறுவனம் ஊழியர்களின் பணிநிரந்தர கோப்பை கவர்னருக்கு அனுப்பாமலும், அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெறாததாலும் பல்நோக்கு ஊழியர்களுக்கு இதுவரை அப்பதவிக்கான சம்பளம் கிடைக்கவில்லை. இப்போது அவர்களுக்கு தினக்கூலி ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது.
மறுபரிசீலனைபல்நோக்கு ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை தருவது என்ற நிர்வாகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்வதோடு, பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டபடி பணிநிரந்தரம் குறித்து அனுப்பவேண்டிய கோப்பினை கவர்னருக்கு அனுப்பி ஒப்புதலை பெற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.