தாராவியில் ஏ.டி.எம். வேனில் ரூ.1½ கோடி கொள்ளை: பெண் உள்பட 3 தமிழர்கள் கைது கூட்டாளிகளை பிடிக்க போலீஸ் திருச்சி விரைந்தது
மும்பை தாராவியில் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் மும்பை தமிழ்ப்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை தாராவியில் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப வந்த வேனில் ரூ.1½ கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் மும்பை தமிழ்ப்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் திருச்சி விரைந்துள்ளனர்.
மும்பை தாராவி முகுந்த் நகரில் உள்ள பிரியதர்ஷன் என்ற கட்டிடத்தின் தரைதளத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 16–ந்தேதி பிற்பகல் 2.50 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப வேனில் ஊழியர்கள் வந்தனர். அங்குள்ள பாந்திரா– சயான் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு ஏ.டி.எம்.மில் ஊழியர்கள் பணத்தை நிரப்ப சென்றிருந்தனர்.
அப்போது மற்ற பணப்பெட்டிகளுடன் வேனில் டிரைவர் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார்.
இதை நோட்டமிட்ட ஒரு கும்பல் அந்த வேனுக்கு கீழே ரூபாய் நோட்டுகளை வீசி டிரைவரின் கவனத்தை திசை திருப்பி, வேனில் இருந்த ஒரு பணப்பெட்டியை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி விட்டனர். அந்த பெட்டியில் ரூ.1 கோடியே 56 லட்சம் இருந்தது. பணத்தை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் வழியாக சர்வசாதாரணமாக பணப்பெட்டியுடன் நடந்து சென்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
12 பேருக்கு தொடர்புமும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் தனித்தனியாக ஆட்டோ மற்றும் டாக்சி பிடித்து தப்பி சென்றிருந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவத்தை போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளுக்கு அனுப்பி உஷார் படுத்தினர். தாராவியை சேர்ந்த போலீஸ் உளவாளிகளிடமும் விசாரித்து வந்தனர்.
பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்தநிலையில், சத்தாரா மாவட்டம் ஆனேவாடி சுங்கச்சாவடியில், பூயிஞ் போலீசார் மும்பையில் இருந்து செல்லும் வாகனங்களை சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
பஸ்சில் சோதனைஅப்போது மும்பை சயானில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ்சை நிறுத்தி அதில், வந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பஸ்சில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பெண் உள்பட 3 பேரின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் பணத்தோடு அந்த பெட்டியை பறிமுதல் செய்து, 3 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். போலீசார் தங்களிடம் இருந்த தாராவி கொள்ளையர்களின் உருவப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, பிடிபட்ட ஆண்கள் இருவரும் அந்த படத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
3 தமிழர்கள்இதையடுத்து பெண் உள்பட 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தாராவியில் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப வந்த வேனில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில் கைதான பெண் சயான் கோலிவாடாவை சேர்ந்த கமலா நாகராஜ், திருச்சியை சேர்ந்த ஆறுமுகம் சுப்பிரமணி, சுரேஷ்குமார் பாண்டுரங்கம் ஆகியோர் என்பதும், மூவரும் தமிழர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்தபோது ரூ.15 லட்சத்து 42 ஆயிரத்து 100 இருந்தது தெரியவந்தது.
திருச்சிக்கு விரைந்த மும்பை போலீஸ்கைதான 3 பேரும் கொள்ளையில் தொடர்புடைய மற்ற 9 பேரின் பெயர் மற்றும் முகவரியை தெரிவித்தனர். உடனே போலீசார் அந்த விவரங்களை தாராவி போலீசுக்கு தெரிவித்தனர். தாராவி போலீசார் சத்தாரா சென்று 3 பேரையும் விசாரணைக்கு மும்பை அழைத்து வந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இந்த கொள்ளையில் தொடர்புடைய சிலர் திருச்சிக்கு தப்பிச்சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிப்பதற்காக நேற்று பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் திருச்சி விரைந்தனர்.
இதற்கிடையே கைதான பெண் உள்பட 3 பேரும் பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.