புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் விபசாரம்: பெண், புரோக்கர் கைது


புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் விபசாரம்: பெண், புரோக்கர் கைது
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர் போல் நடித்து ஆன்லைன் மூலம் விபசார தொழில் நடத்திய பெண் மற்றும் புரோக்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவைக்கு நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் இவர்களை குறிவைத்து சிலர் விபசார தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் தேடிப் பிடிக்கின்றனர். ஆன்லைனில் சில செல்போன் எண்களை பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த நம்பரில் யாராவது அழைத்தால் அவர் உண்மையிலேயே சுற்றுலாவுக்கு வந்தவரா? என அறிந்துகொண்டு அதன்பின் சமூக வலைதளம் மூலம் சில பெண்களின் புகைப்படங்களை காட்டுகின்றனர்.

அதில் விருப்பமானவர்களை தேர்வு செய்ததும் குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து நேரில் விசாரிக்கின்றனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விபசார கும்பலைச் சேர்ந்தவர்கள் பெண்களை அனுப்பி வைக்கின்றனர். ஏற்கனவே இதுபோல் ஆன்லைன் விபசாரம் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்தினர்.

மாறுவேடத்தில் போலீசார்

இந்தநிலையில் ஆன்லைன் விபசாரம் மீண்டும் கொடிகட்டி பறந்தது குறித்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க புதுவை சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையொட்டி குறிப்பிட்ட ஆன்லைனில் விபசாரம் குறித்த தகவலை சேகரித்து அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் பேசினார்கள். இதை நம்பிய விபசார புரோக்கர், ஒரு குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து அங்கு வருமாறு தெரிவித்தார். உடனே சீருடை அணியாத போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் பேசி விபசார அழகிகள் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அந்த புரோக்கர் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள பீட்டர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கு இருந்த அழகிகளை காட்டினார்.

பெண் உள்பட விபசார புரோக்கர் கைது

இதையெல்லாம் வைத்து அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்து கொண்ட போலீசார் உடனே அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்த 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆசைவார்த்தை கூறி அவர்களை விபசாரத்தில் அந்த கும்பல் தள்ளி இருப்பதும் தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் போர்வையில் வந்து இருப்பது போலீசார் என்பதை அறிந்ததும் அவர்களை அழைத்துச் சென்ற புரோக்கர் தப்பி ஓட முயன்றார். அவரையும், அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசார தொழில் நடத்திய பெண்ணையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் வேல்ராம்பட்டு ஏரிக்கரையை சேர்ந்த பிரதீபன் (வயது 42), ஸ்ரீமதி (48) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு லேப்டாப், 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு

அவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகளை ஆய்வு செய்ததில் அவை போலி முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டைகளை கொடுத்து பெற்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சிம்கார்டுகளை வழங்கியவர்களை அழைத்து ஒரிஜினல் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் இதுபோன்று சிம்கார்டுகளை வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களும் அங்கிருந்து மீட்கப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு விபசார கும்பலை கைது செய்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ, சிறப்பு அதிரடிப்படை உதவி சப்–இன்ஸ்பெக்டர்கள் ரிச்சர்டு, சிசுபாலன், போலீஸ்காரர்கள் கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், பெரியசாமி, மணிகண்டன், பழனிராஜா, சரவணன் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story