அமெரிக்காவின் அதிர்வேட்டுகள்


அமெரிக்காவின் அதிர்வேட்டுகள்
x
தினத்தந்தி 19 March 2017 11:04 AM IST (Updated: 19 March 2017 11:04 AM IST)
t-max-icont-min-icon

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குக்கு ஏற்ப, மக்களின் வாழ்விடம் இன்று அகல விரிந்து இருக்கிறது.

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குக்கு ஏற்ப, மக்களின் வாழ்விடம் இன்று அகல விரிந்து இருக்கிறது.

இளைய சமூகத்தினரோ தங்கள் சொந்த ஊர், தாய்நாடு போன்ற குறுகிய வட்டங்களை விட்டு வெளியேறி, கடல் கடந்து, கண்டங்களை தாண்டி கொடிநாட்டி வருகின்றனர்.

நாடுகளின் உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் போன்ற கொள்கைகளாலும், வேகமாக வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியாலும், திறமையும், வாய்ப்பும் உடைய இளைஞர்களின் சாதனைக்கு வானமே எல்லை என்றாகிவிட்டது.

இப்படிப்பட்ட இளையோரை இருகரம் நீட்டி சுவீகரிக்க உலக நாடுகளும் தயாராகவே இருக்கின்றன.

தங்கள் நாட்டை முன்னெடுத்துச்செல்லும் திறமை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் தயங்குவதில்லை. இதற்கு வல்லரசு நாடான அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

உலகுக்கே காவலன் என்ற தோரணையில் வலம் வந்தாலும், அங்கும் ஐ.டி., மருத்துவம், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டினரும் கோலோச்சி வருகின்றனர். இதற்காக ‘எச்1பி’ என்ற தற்காலிக விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

வரப்பிரசாதமாக அமைந்த இந்த விசாக்களை பயன்படுத்தி பெருமளவிலான இந்தியர்கள் தங்கள் ஜாகையை அங்கே மாற்றிக்கொண்டு உள்ளனர்.

இதன் காரணமாக இந்திய திறனாளர்களின் பெருங்கனவுகளில் ஒன்றாக அமெரிக்க பயணம் மாறி விட்டது. அங்குள்ள சூழலில் பணிபுரிந்து, டாலர்களில் சம்பளம் பெற்று எதிர்கால சவாலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை தங்கள் லட்சியங்களில் ஒன்றாக கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த அமெரிக்க கனவுக்கு பேரிடியாக விழுந்து இருக்கிறது அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்பின் அதிரடி.

அமெரிக்காவின் வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையை கையில் எடுத்திருக்கும் அவர், வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.

அமெரிக்க அரசு வழங்கும் தற்காலிக குடியேற்ற விசாவான இந்த எச்1பி விசாவை கலை, தொழில்நுட்பம் போன்ற முக்கியமான துறைகளை சேர்ந்த வெளிநாட்டினர் பெற முடியும். இந்த விசா மூலம்தான் அந்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நபர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றன.

3 ஆண்டுகளுக்கு என வழங்கப்படும் இந்த விசாவை, மேலும் 6 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்ய முடியும். சில சந்தர்ப்பங்களில் மேலும் நீட்டிப்பு பெறவும் வசதி உள்ளது.

இப்படி ஆண்டுதோறும் 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் 20 ஆயிரம் மாணவர்களும் இந்த விசா பெறுகின்றனர்.

அமெரிக்காவின் இந்த எச்1பி விசாவை ஆண்டுதோறும் இந்தியர்கள்தான் அதிகம் பெறுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளில் 3 ஜனாதிபதிகளின் ஆட்சிக்காலத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விசா பெற்று உள்ளனர்.

கடந்த 2014–ம் ஆண்டு எடுத்த கணக்குப்படி அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 86 சதவீதம் பேர் இந்தியர்கள் என கண்டறியப்பட்டது. அதற்கு அடுத்ததாக 5 சதவீத சீனர்கள் இந்த விசா வைத்திருந்தனர்.

2015–ம் ஆண்டு வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் பெரும்பாலானவற்றை இந்திய ஐ.டி. நிறுவனங்கள் பெற்றிருந்தன. இதில் 4,674 விசாக்களை பெற்று டி.சி.எஸ். நிறுவனம் முதலிடம் பிடித்து இருந்தது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 3½ லட்சம் இந்திய என்ஜினீயர்கள் அமெரிக்காவில் உள்ள பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அவுட்சோர்சிங் எனப்படும் அமெரிக்க நிறுவனங்களை சார்ந்து இயங்கும் இந்திய ஐ.டி. துறையில் 37 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்திய ‘இன்போடெக்’ துறையின் 60 சதவீத வர்த்தகமும் அமெரிக்காவில் இருந்தே வருகிறது.

இதைப்போல சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அமெரிக்காவுக்கு தற்காலிக பணியிட மாறுதல் பெறுவதற்கு ‘எல்1 விசா’ வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை வழங்கப்பட்ட எல்1 விசாக்களில் 30 சதவீதத்தை இந்தியர்களே பெற்று இருக்கின்றனர்.

இவ்வாறு அதிக அளவிலான அமெரிக்க வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பெற்று வந்ததால் அமெரிக்கர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருந்தது.

இதை பயன்படுத்திக்கொண்ட டிரம்ப் அமெரிக்க வேலைவாய்ப்புகள் உள்நாட்டினருக்கே வழங்கப்படும் என ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கூறி மக்களின் ஓட்டுகளை அள்ளினார்.

தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் அவர், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அதிரடி நடவடிக்கையை தொடங்கி விட்டார்.

அதன்படி எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா தயார் செய்யப்பட்டு உள்ளது. அதுவும் தனது பதவிக்காலத்தின் முதல் மசோதாவாகவே இதை கொண்டு வந்து அதிர்ச்சி அளித்து உள்ளார் டிரம்ப்.

‘தி ஜோ லோப்ரன் பில்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி எச்1பி விசா வைத்திருப்பவர்களின் ஆண்டு சம்பளம் தற்போதைய 60,000 டாலரில் (சுமார் 40 லட்சம்) இருந்து 1,30,000 டாலராக (சுமார் 90 லட்சம்) உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே குடியரசு கட்சி எம்.பி.க்களான கலிபோர்னியாவை சேர்ந்த டாரல் இசா, ஸ்காட் பிட்டர்ஸ் ஆகியோர் அமெரிக்க பணிகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா ஒன்றை கடந்த ஜனவரி 4–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். உயர்திறன் பணிகளில் அமர்த்தப்படுவோருக்கான சம்பளத்தை ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலரில் இருந்து 1 லட்சம் டாலராக உயர்த்துவதும், எச்1பி விசாவில் பணியாற்றுவோருக்கு முதுநிலை பட்டம் கட்டாயம் என்பதுமே அந்த சட்டத்தின் சாராம்சம்.

மொத்தத்தில் உயர்திறன் பணிகள் மற்றும் அதிக சம்பளம் வாங்குவோருக்கே எச்1பி விசா என டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 1,30,000 டாலருக்கு குறைவான சம்பளம் பெறும் இந்திய என்ஜினீயர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்வதால் தான் இந்தியர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு வைக்கின்றன. ஆனால் இந்த புதிய சட்டப்படி எச்1பி விசா வைத்திருப்போருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதால், இந்தியர்களுக்கு பதிலாக உள்ளூர் இளைஞர்களுக்கே அவை முக்கியத்துவம் கொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால் புதிதாக படித்து வெளிவரும் மற்றும் வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பை பெற நினைக்கும் இந்திய மாணவர்களின் அமெரிக்க கனவு கலையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சட்டத்தால் ஐ.டி. நிறுவனங்களின் செலவினம் உடனடியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. சில நிறுவனங்களால் எச்1பி விசா வைத்திருப்போரின் சம்பளத்தை 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும். ஆனால் இது அந்தந்த நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இந்த நிறுவனங்கள் உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் நெருக்கடியை குறைக்க தற்போதே முயன்று வருகின்றன. அதைப்போல தங்கள் நிறுவனங்களையும் செலவினம் குறைந்த பகுதிகளை நோக்கி நகர்த்த முனைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஆண்டுதோறும் அதிகமான எச்1பி விசாக்களை பெறும் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) கூறியுள்ளது.

எச்1பி விசா வைத்திருப்போர் தங்கள் கணவன் அல்லது மனைவிக்கு அமெரிக்காவில் எளிதாக பணி மற்றும் விசா பெறும் நிலை இருந்தது. முந்தைய ஒபாமா நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்திருந்த இந்த சலுகையையும் தற்போதைய மசோதா மூலம் டிரம்ப் நிர்வாகம் முடக்க முடிவு செய்து இருக்கிறது.

மேலும் அமெரிக்காவில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பு முடித்த பின் நீண்ட நாட்கள் அங்கேயே தங்கியிருக்க வகை செய்யும் விசா நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரும் ஆபத்தாக முடியும் நிலையை உருவாக்கி உள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட உடனே அது இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது. டி.சி.எஸ்., இன்போசிஸ், மகிந்திரா உள்ளிட்ட 5 ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் குறைந்து பெரும் நஷ்டத்தை  சந்தித்தன.  மொத்தத்தில்   ரூ.33 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

எச்1பி விசா தொடர்பான இந்த திருத்த மசோதா இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு அதிக பயனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனங்களை விட அதிக சம்பளம் கொடுக்கும் இந்த நிறுவனங்கள், எச்1பி விசா மூலம் அதிக திறன் பெற்ற ஊழியர்களை பணியமர்த்த முடியும்.

டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு இன்னும் பல்வேறு நிலைகளை கடந்தாக வேண்டும். அமெரிக்காவில் ஒரு மசோதா சட்டமாக மாற சராசரியாக 260 நாட்கள் எடுக்கும். அதற்குள் இந்த திருத்தங்கள் குறித்து ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் என ஐ.டி. வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து இருக்கும் டிரம்பின் முடிவால் அமெரிக்க ஐ.டி. துறையின் மையமாக கருதப்படும் சிலிகான் பள்ளத்தாக்குக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிரம்பின் அந்த நிறைவேற்று ஆணையை எதிர்த்து அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை பாதிக்கும் அமெரிக்காவின் மசோதா குறித்து இந்தியா கவலை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் மற்றும் பாராளுமன்றத்துக்கு இந்தியா தனது கவலையை தெரிவித்து இருப்பதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் பதவி வகித்த விகாஸ் ஸ்வரூப் கூறினார்.

டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒருசில தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அப்படி இந்திய பிரதமருடன் நட்பு பாராட்டிய டிரம்ப், கணிசமான இந்தியர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாகி இருப்பது பெரும் முரணாகவே இருக்கிறது.

எது எப்படியிருப்பினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் வேலை இழத்தல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் இந்தியர்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன்  கையை  ஏந்த  வேண்டும்     வெளிநாட்டில்...’ என்ற பொன்வரிகளை நினைவில் நிறுத்தி, சகல வளமும் கொண்ட பாரதத்தில் குடிமக்கள் ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் வளப்படுத்த வேண்டியது ஆளும் வர்க்கத்தினரின் தலையாய கடமை என்றால் மிகையல்ல.


திருப்பி அனுப்பும் பணிகள் தொடக்கம்

எச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளின் தாக்கம் முழுவதுமாக இன்னும் வெளிவராத நிலையில், அதன் சாரல் ஏற்கனவே அடிக்க தொடங்கி விட்டது. இந்தியர்களை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சம்பவங்கள் அங்கு தொடங்கிவிட்டன.

வாஷிங்டன் அருகே சியாட்டில் நகரில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த இந்திய இளம்பெண் சித்ரா, கடந்த ஜனவரி தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். பின்னர் அவர் ஜனவரி 24–ந் தேதி அமெரிக்கா திரும்பினார். ஆனால் அவரை சியாட்டில் பகுதியில் நுழைய விடாமல் தடுத்த குடியேற்ற அதிகாரிகள் எந்த காரணமும் கூறாமல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.

சித்ராவின் கணவர் மற்றும் குழந்தைகள் அமெரிக்க குடிமக்களாக இருந்தும், அவர் கிரீன் கார்டு வைத்திருந்த போதும் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அவர் குடியேற்றப்பிரிவு வக்கீல்களின் உதவியுடன் சட்டப்போராட்டத்தில் இறங்கி உள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவி பிரீதி, சமீபத்தில் இந்தியா வந்து விட்டு அமெரிக்கா திரும்பினார். விமான நிலையத்தில் பலமணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அடுத்த விமானத்திலேயே அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். பிரீதியின் கல்வி மற்றும் அதற்கான நிதி குறித்து அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

இதைப்போல ஐதராபாத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற ஐ.டி. ஊழியர் எச்1பி விசாவில் சான்பிரான்சிஸ்கோவில் பணியாற்றி வந்தார். கடந்த டிசம்பரில் இந்தியா வந்த அவர், தனது விசாவை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்து இருந்தார். வழக்கமாக 10 நாட்களுக்குள் புதுப்பித்து வழங்கப்படும் இந்த விசா தற்போது இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தான் பணியாற்றி வந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் தற்போது வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் என்றே அஞ்சப்படுகிறது.

இந்தியரின் சேவை நிச்சயம் தேவை

அமெரிக்காவில் எச்1பி விசாவுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு வரப் பட்டுள்ள மசோதாவால் வெளிநாட்டினருக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளிவந்தாலும், இந்தியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள், அவற்றின் பெங்களூரு, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் கிளைகளில்தான் பெரும்பாலான இந்தியர்களை பணியமர்த்துகின்றன. எனவே இந்தியர்கள் பாதிப்படைய வாய்ப்பில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதைப்போல ஐ.டி. மற்றும் அது தொடர்பான துறைகளில் இந்தியர்கள் சிறந்த திறன் பெற்றிருப்பதால், இந்தியர்களின் சேவை அமெரிக்காவுக்கு நிச்சயம் தேவை எனவும் மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.

Next Story